மீண்டும் சொதப்பிய நியூஸிலாந்து அணி: 3-வது ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!
2-வது முறையாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது...


மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - நியூஸிலாந்து ஒருநாள் தொடர், சிறிதும் சுவாரசியமின்றி இந்திய அணிக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.
5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் என இரு தொடர்களில் விளையாடுவதற்காக கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூஸிலாந்தில் வெற்றிகளைப் பெற்று வருகிறது. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களையும் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
மௌன்ட் மவுன்கனியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். விஜய் சங்கருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா அணிக்குள் நுழைந்தார்.
வழக்கம்போல இந்தமுறையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்கள். கப்தில் 13 ரன்களிலும் மன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து அணியைக் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன், 28 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. எனினும் இதன்பிறகு ஜோடி சேர்ந்த டெய்லரும் லதமும் பக்குவமாக விளையாடி, அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். நிதானமாக ரன்கள் குவித்தாலும் விக்கெட் பறிபோகக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுடன் விளையாடினார்கள். இதனால் இவர்களுடைய கூட்டணி 20 ஓவர்களுக்கும் மேல் நீடித்து 119 ரன்கள் குவித்தது. டெய்லர் 71 பந்துகளிலும் லதம் 62 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினார்கள். எனினும் லதம் 51 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆட்டம் மீண்டும் இந்திய அணியின் கைக்கு வந்தது. கடகடவென விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். நிகோல்ஸ் 6 ரன்களிலும் சாண்ட்னர் 3 ரன்களும் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள்.
இடைக்காலத் தடைக்குப் பிறகு அணிக்குள் நுழைந்துள்ள பாண்டியா இன்று அற்புதமாகப் பந்துவீசியதோடு அட்டகாசமான கேட்சையும் பிடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். இதற்கிடையில், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெய்லர், 93 ரன்களில் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நியூஸிலாந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஒரு சிக்ஸர் அடித்து 12 ரன்களில் வெளியேறினார் சோதி. 49-வது ஓவரின் முதல் பந்தில் 15 ரன்களில் ரன் அவுட் ஆனார் பிரேஸ்வெல். அதே ஓவரில், போல்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். டெய்லரும் லதமும் விளையாடிக்கொண்டிருந்தபோது கடைசி 15 ஓவர்களில் நன்கு விளையாடி நியூஸிலாந்து அணி 300 ரன்களைத் தொட பாடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசத்தலான பந்துவீச்சால் 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடமுடியாமல் போனது.
பேட்டிங்குக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணியால் 49 ஓவர்களில் 243 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷமி 3 விக்கெட்டுகளும் சாஹல், புவனேஸ்வர், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்தமுறையும் முழு 50 ஓவர்களும் விளையாடாமல் போனதால் நியூஸிலாந்து அணியால் மீண்டும் அதிக ரன்களை எடுக்கமுடியாமல் போனது.
இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. 27 பந்துகளில் 6 பவுண்டரிகளைக் கடகடவென அடித்து, 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார் தவன். பிறகு ரோஹித் சர்மாவும் கோலியும் விரைவாக ரன்கள் சேர்த்தார்கள். முதலில் 69 ரன்களில் 50 ரன்கள் சேர்த்த இவர்கள் அடுத்ததாக 105 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ரோஹித் சர்மா 63 பந்துகளிலும் கோலி 59 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். இந்திய அணி 28-வது ஓவரில் 150 ரன்களை எடுத்தது. இருவரில் யார் சதமெடுப்பார்கள் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், 62 ரன்களில் ரோஹித் சர்மாவும் 60 ரன்களில் கோலியும் ஆட்டமிழந்தார்கள். எனினும் 32-வது ஓவரில் ஜோடி சேர்ந்த ராயுடுவும் தினேஷ் கார்த்திக்கும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிக்கோட்டை நெருங்கும்வரை களத்தில் இருந்தார்கள். இருவரும் தலா 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடித்து, ராயுடு 40 ரன்களும் தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தார்கள்.
இந்திய அணி, 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 2-வது முறையாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.
இந்த ஆட்டத்துடன் கேப்டன் விராட் கோலி, நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். கடைசி இரு ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் அவர் பங்கேற்கமாட்டார். இதையடுத்து மீதமுள்ள ஆட்டங்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்படுவார். 4-வது ஒருநாள் ஆட்டம் வரும் 31 அன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...