கைக்கு அருகில் தொடர் வெற்றி: பந்துவீச்சில் மீண்டும் அசத்திய இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு!

3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது...
கைக்கு அருகில் தொடர் வெற்றி: பந்துவீச்சில் மீண்டும் அசத்திய இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் என இரு தொடர்களில் விளையாடுவதற்காக கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூஸிலாந்தில் வெற்றிகளைப் பெற்று வருகிறது. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களையும் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. 

மௌன்ட் மவுன்கனியில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். விஜய் சங்கருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா அணிக்குள் நுழைந்துள்ளார்.

வழக்கம்போல இந்தமுறையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்கள். கப்தில் 13 ரன்களிலும் மன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து அணியைக் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன், 28 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. எனினும் இதன்பிறகு ஜோடி சேர்ந்த டெய்லரும் லதமும் பக்குவமாக விளையாடி, அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். நிதானமாக ரன்கள் குவித்தாலும் விக்கெட் பறிபோகக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுடன் விளையாடினார்கள். இதனால் இவர்களுடைய கூட்டணி 20 ஓவர்களுக்கும் மேல் நீடித்து 119 ரன்கள் குவித்தது. டெய்லர் 71 பந்துகளிலும் லதம் 62 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினார்கள். எனினும் லதம் 51 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆட்டம் மீண்டும் இந்திய அணியின் கைக்கு வந்தது. கடகடவென விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். நிகோல்ஸ் 6 ரன்களிலும் சாண்ட்னர் 3 ரன்களும் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள்.

இடைக்காலத் தடைக்குப் பிறகு அணிக்குள் நுழைந்துள்ள பாண்டியா இன்று அற்புதமாகப் பந்துவீசியதோடு அட்டகாசமான கேட்சையும் பிடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். இதற்கிடையில், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெய்லர், 93 ரன்களில் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நியூஸிலாந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஒரு சிக்ஸர் அடித்து 12 ரன்களில் வெளியேறினார் சோதி. 49-வது ஓவரின் முதல் பந்தில் 15 ரன்களில் ரன் அவுட் ஆனார் பிரேஸ்வெல். அதே ஓவரில், போல்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். டெய்லரும் லதமும் விளையாடிக்கொண்டிருந்தபோது கடைசி 15 ஓவர்களில் நன்கு விளையாடி நியூஸிலாந்து அணி 300 ரன்களைத் தொட பாடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசத்தலான பந்துவீச்சால் 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடமுடியாமல் போனது. 

பேட்டிங்குக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணியால் 49 ஓவர்களில் 243 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷமி 3 விக்கெட்டுகளும் சாஹல், புவனேஸ்வர், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்தமுறையும் முழு 50 ஓவர்களும் விளையாடாமல் போனதால் நியூஸிலாந்து அணியால் மீண்டும் அதிக ரன்களை எடுக்கமுடியாமல் போயிருக்கிறது. இதையடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி வென்று 3-0 என தொடரில் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com