இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது, தினேஷ் கார்த்திக் அணியில் நீடிப்பாரா?

ஷுப்மன் கில்லா, தினேஷ் கார்த்திக்கா? இந்திய அணியின் முடிவு என்னவாக இருக்கும்?
இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது, தினேஷ் கார்த்திக் அணியில் நீடிப்பாரா?
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 19 வயது ஷுப்மன் கில்லின் அறிமுகத்தை வெகுவாக எதிர்பார்க்கிறார்கள். எனினும் நாளை நடைபெறவுள்ள ஒருநாள் ஆட்டத்தில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படி அவரைத் தேர்வு செய்தால் அது மிகப்பெரிய முடிவாக இருக்கும்.

கடந்த வருடம் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதில் தொடர் நாயகன் பட்டம் வென்று அசத்தினார்  ஷுப்மன் கில். இதுவரை அவர் விளையாடியுள்ள 7 ரஞ்சி ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது எடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதுவரை விளையாடிய 9 முதல்தர ஆட்டங்களிலும் தலா ஒரு அரை சதம் எடுத்து அசத்தியுள்ளார். 9 ஆட்டங்களில் 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். இந்த வருடம் 5 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடி 2 சதங்கள் 4 அரை சதங்களுடன் 728 ரன்கள் எடுத்துள்ளார். தமிழகத்துக்கு எதிராக 268 ரன்களும் ஹைதராபாத்துக்கு எதிராக 148 ரன்களும் எடுத்து அதிகக் கவனம் ஈர்த்தார். இதையடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்குப் பதிலாகத் தேர்வானார்.

ஷுப்மனின் திறமையை விராட் கோலியும் மனம் திறந்து பாராட்டியுள்ளார். 3-வது ஒருநாள் ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய கோலி,  ஷுப்மன் கில் குறித்துக் கூறியதாவது: வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில் பேட்டிங் செய்ததைப் பார்த்தேன். உடனே வியந்துபோனேன். நான் அவருடைய வயதில் (19) 10 சதவிதம் கூட அதுபோல விளையாடவில்லை என்று மெச்சியுள்ளார் கோலி.

3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்டத்துடன் கேப்டன் விராட் கோலி, நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். கடைசி இரு ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் அவர் பங்கேற்கமாட்டார். இதையடுத்து மீதமுள்ள ஆட்டங்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்படுவார். 4-வது ஒருநாள் ஆட்டம் நாளை, ஹேமில்டனில் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து கோலிக்குப் பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஆனால் ஷுப்மன் கில்லை அணியில் சேர்த்தால் அதனால் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து வெளியேற நேரிடும். ராயுடு, ஜாதவ் ஆகியோரை வெளியேற்றமுடியாது என்பதால் தினேஷ் கார்த்திக் தான் வெளியேறவேண்டியிருக்கும். ஆனால், சமீபகாலமாக வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இதனால் புதிய வீரருக்காக அவரை அணியிலிருந்து வெளியேற்றுவது நியாயமல்ல என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது. கோலியும் இல்லாமல் தோனி, தினேஷ் கார்த்திக் என இருவரும் அணியில் இடம்பெறும்பட்சத்தில் ராயுடு 3-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டியிருக்கும். தோனி, ஜாதவ், தினேஷ் கார்த்திக், பாண்டியா ஆகியோர் அதன்பின்பு பேட்டிங் செய்ய வருவார்கள். இந்த ஏற்பாட்டுக்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் ஷுப்மன் கில் நாளை விளையாடமாட்டார். தினேஷ் கார்த்திக் அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பார். 

அதேசமயம், ஷுப்மன் கில் போன்ற ஒரு திறமையை ஏன் இந்திய அணி உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். முன்னாள் கேப்டன் கங்குலி, ஷுப்மன் கில் உலகக் கோப்பையில் விளையாடவும் ஆதரவு தெரிவித்துள்ளார். கோலிக்குப் பதிலாக ஷுப்மன் கில் விளையாடவேண்டும் என்று கவாஸ்கரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்திய அணிக்கும் இதேபோன்ற விருப்பங்கள் இருந்தால் ஷுப்மன் கில் நாளைய ஒருநாள் ஆட்டத்தில் இடம்பெறக்கூடும். 

ஒருவேளை, ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்று தனது திறமையையும் நிரூபித்துவிட்டால், இந்தியத் தேர்வுக்குழுவினருக்குப் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஷுப்மன் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவதாக இருந்தால், பிற வீரர்களை அணியிலிருந்து வெளியேற்ற நேரிடும். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணிக்குள் மீண்டும் நுழையமுடியாத நிலை ஏற்படும். இந்தக் குழப்பம் ஏற்படாமல் இருக்க, உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

ஷுப்மன் கில்லா, தினேஷ் கார்த்திக்கா? இந்திய அணியின் முடிவு என்னவாக இருக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com