
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இந்திய அணி இப்போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே போட்டியின் போது நாதன் கௌடர் நைலின் பௌன்சர் பந்து பட்டத்தில் ஷிகர் தவனின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஃபீல்டிங் செய்யவில்லை.
மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவில் தவன் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
எனவே காயம் காரணமாக அவர் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
எனவே ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் மாற்று வீரராக இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்லவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐசிசி விதிகளின் படி உலகக் கோப்பை தொடரின் மத்தியப் பகுதியில் காயமடைந்த வீரருக்கு மாற்று வீரரை தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு காயமடைந்த வீரர் குணமடைந்துவிட்டால் அணியில் மீண்டும் சேர்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.