
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான பட்டியலில் வில் வித்தை வீரர்களான தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவீண் ஜாதவ், அதுல் வர்மா ஆகிய 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போட்டிகளில் இந்த வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக சாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தருண்தீப், அதானு தாஸ், பிரவீண் ஆகியோர் இம்மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ரீகர்வ் அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த மூவர் அணி அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கும் தகுதிபெற்றது. மேலும், ரீகர்வ் தனி நபர் பிரிவில் தனித் தனியே பங்கேற்கவும் அவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அதுல் வர்மா, கடந்த 2014-ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
இதனிடையே, வீரர்களுக்கு நிதியுதவி மற்றும் விளையாட்டுக் கருவிகள் உதவிக்காக ரூ.34 லட்சம் செலவிடுவது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒலிம்பிக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மல்யுத்த போட்டியாளர்களான பூஜா தண்டா, பஜ்ரங் புனியா, உத்கர்ஷ் காலே, வினேஷ் போகட் ஆகியோர் வெளிநாடுகளில் பயிற்சி பெறவும், அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும் நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் தூர் வெளிநாட்டு பயிற்சியாளர் வைத்துக் கொள்ளவும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா விளையாட்டுக் கருவிகள் வாங்குவதற்கும் தேவையான நிதியளிக்க முடிவெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.