வயதைக் குறைத்துக் கூறியது ஏன்: சாஹித் அஃப்ரிடி விளக்கம்!

என்னுடைய வயது குறித்துக் குழப்பம் ஏற்பட்டதற்குக் காரணம், 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது... 
வயதைக் குறைத்துக் கூறியது ஏன்: சாஹித் அஃப்ரிடி விளக்கம்!
Published on
Updated on
1 min read

1996-ல், 37 பந்துகளில் சதமடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் பாகிஸ்தான் சாஹித் அஃப்ரிடி. அதைவிடவும் அவருக்கு 16 வயதுதான் என்பது மேலும் வாயைப் பிளக்கவைத்தது. எனினும் அஃப்ரிடியின் வயது குறித்துப் பலரும் சந்தேகங்களைத் தொடர்ந்து எழுப்பி வந்தார்கள். 

அஃப்ரிடி எழுதியுள்ள கேம்சேஞ்சர் என்கிற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த நூலில், 1975-ன் நான் பிறந்தேன். 1996 அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தேர்வாகினேன். நிர்வாகிகள் சொன்னது போல எனக்கு 16 வயது அல்ல, 19 வயது. என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார். இதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்தச் சர்ச்சை குறித்து தற்போது பதில் அளித்துள்ளார் சாஹித் அஃப்ரிடி. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:

என்னுடைய வயது குறித்துக் குழப்பம் ஏற்பட்டதற்குக் காரணம், 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது என் வயதே எனக்குத் தெரியாமல் இருந்தது. தேர்வுக்குழுவினர் என் வயதைக் கேட்டபோது, மற்றவர்கள் என்னை என்னச் சொல்லச் சொன்னார்களோ அதையே கூறினேன். அந்த வயது, கிரிக்கெட் வாரியப் பதிவுகளில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. அதனால் தான் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் எனக்கு வருத்தமில்லை. 1996 முதல் அதிவேக சதமடித்த வீரர் என்கிற சாதனை என்னிடம் உள்ளது. அதற்கான வயது என எது குறிப்பிடப்பட்டாலும். நான் கிராமத்தில் பிறந்தவன். அங்கு பிறந்த தேதியைக் குறிப்பிடும் வசதி இல்லை. பிறப்புச் சான்றிதழும் வழங்கப்படாது. எங்கள் குடும்பம் கராச்சிக்குக் குடியேறியபோது எனக்கு நான் பிறந்த மாதமும் தேதியும் மட்டுமே தெரியும். வருடம் எது எனச் சரியாகத் தெரியாது. அதனால் தான் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது என் வயது தவறாகக் குறிப்பிடப்பட்டது. நான் பிறந்த வருடம் 1977. ஆனால் புத்தகத்தில் உள்ளது போல 1975 அல்ல. அது பதிப்பாளர், காப்பி எடிட்டர்கள் செய்த தவறு. 2-வது பதிப்பில் தவறு சரிசெய்யப்படும். சில தகவல் பிழைகளும் அடுத்தப் பதிப்பில் சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com