தேசிய இளையோர் கூடைப்பந்து:ஆந்திரம், கர்நாடகம் வெற்றி

தேசிய அளவிலான 16 வயதுக்கு உள்பட்டோருக்கான 36-ஆவது இளையோர் தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதல் நாள் ஆட்டங்களில் ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப் மாநில அணிகள்
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஒரு ஆட்டத்தில் மோதிய தமிழ்நாடு - ஹரியாணா அணி வீரர்கள்.
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஒரு ஆட்டத்தில் மோதிய தமிழ்நாடு - ஹரியாணா அணி வீரர்கள்.
Updated on
1 min read


தேசிய அளவிலான 16 வயதுக்கு உள்பட்டோருக்கான 36-ஆவது இளையோர் தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதல் நாள் ஆட்டங்களில் ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப் மாநில அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியவற்றின் சார்பில் இளையோர் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் வரும் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 
 போட்டிகளின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கி வைத்தார். இதில், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் தலைவர் ராஜ் சத்தியன், செயலர் ஆதவ் அர்ஜுனன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் ஜி.செல்வராஜ், பி.எஸ்.ஜி. விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.ருத்ரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நாள் ஆட்டங்கள் காலை முதல் தொடங்கி நடைபெற்ற நிலையில், ஆடவர் பிரிவு முதல் போட்டியில் ராஜஸ்தான் - தில்லி அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 85 - 29 என்ற புள்ளிகள் கணக்கில் தில்லியை வீழ்த்தியது. 2ஆவது ஆட்டத்தில் கர்நாடக அணி 67-64 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளத்தை போராடி வீழ்த்தியது. 3ஆவது ஆட்டத்தில் ஆந்திர அணி 120 - 54 என்ற புள்ளிகள் கணக்கில் கோவாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 4ஆவது ஆட்டத்தில் உ.பி. அணி 87 - 26 என்ற புள்ளிகள் கணக்கில் ஹிமாச்சல பிரதேச அணியை வீழ்த்தியது. இதேபோல், தமிழ்நாடு, ஹரியாணா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹரியாணா 82 - 63 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. 
 மகளிர் பிரிவு முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 74 - 69 என்ற புள்ளிகள் கணக்கில் தில்லியையும், கேரள அணி 60 - 35 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தின. கர்நாடக அணி 63 - 36 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரபிரதேசத்தையும், ஆந்திர அணி 74 - 33 என்ற புள்ளிகள் கணக்கில் கோவாவையும், மேற்கு வங்க அணி 61- 22 என்ற புள்ளிகள் கணக்கில் ஜம்மு - காஷ்மீரையும், சத்தீஸ்கர் அணி 51- 36 என்ற புள்ளிகள் கணக்கில் அஸ்ஸாமையும் வீழ்த்தின. தமிழ்நாடு - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 79 - 29 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேசம் அணியை வீழ்த்தியது. இரண்டாவது நாள் லீக் ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com