உலகக் கோப்பை கிரிக்கெட்: 7ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

இந்தியாவில் தேர்தல் திருவிழா முடிந்துள்ள நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட்: 7ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?


இந்தியாவில் தேர்தல் திருவிழா முடிந்துள்ள நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளன. கபில்தேவ், தோனி வரிசையில் விராட் கோலியும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜூன் 16ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் 7ஆவது முறையாக இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்குமா என்ற எண்ணமே ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச்செய்துள்ளது.
 இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்துள்ள 131 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியே 74 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆனால் உலகக்கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி 7 ஆவது முறையாக இவ்விரு அணிகளும் சந்திக்கும் போட்டி நடைபெற உள்ளது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் இம்முறை இந்திய அணியை வீழ்த்தியே தீருவோம் என சவால் விடுத்துள்ளதால் ரசிகர்களிடையை கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக 1992 ஆம் ஆண்டு விளையாடின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 216 ரன்கள் எடுத்தது. நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 இரண்டாவது முறையாக 1996 இல் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 287 ரன்கள் குவித்தது. நவ்ஜோத்சிங் சித்து 93 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
 மூன்றாவது முறையாக இரு அணிகளும் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 227 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் ராகுல் திராவிட் 61 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இம்முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 
நான்காவது முறையாக 2003 இல் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சயீத் அன்வர் 101 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி சச்சின் டெண்டுல்கரின் 98 ரன்கள் உதவியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 2011ஆம் ஆண்டு இரு அணிகளும் ஐந்தாவது முறையாக விளையாடின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 260 ரன்கள் எடுத்தது. இம்முறையும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்களைக் குவித்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 2015 இல் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் 6ஆவது முறையாக மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் கோலியின் சதத்துடன் (107 ரன்கள்) 300 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 224 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தியதால் 6ஆவது முறையாக இந்திய அணி வென்றது.
2019 உலகக் கோப்பையில் 7ஆவது முறையாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான ஆட்டம், ஜூன் 16 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி 3 ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதுடன், 7ஆவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாறு படைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com