என்ன செய்யப் போகிறார் கங்குலி?: ஐசிசியின் புதிய முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிசிசிஐ!

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக ஐசிசியின் இந்தப் புதிய ஆட்ட அட்டவணை குறித்த தனது சம்மதத்தையோ எதிர்ப்பையோ உடனடியாக...
என்ன செய்யப் போகிறார் கங்குலி?: ஐசிசியின் புதிய முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிசிசிஐ!

ஐசிசியுடன் மற்றொரு மோதலுக்கு தயாராகிவிட்டது பிசிசிஐ.

ஐசிசியின் புதிய ஆட்ட அட்டவணை, பிசிசிஐயின் வருமானத்துக்குப் பாதகமாக இருக்கும் என்கிற நிலையில் பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது ஐசிசி. 

2023-2031 வரை ஒவ்வொரு வருடமும் ஆடவர் & மகளிர் ஐசிசி போட்டிகள் நடைபெறவேண்டும் என்று துபையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் இரு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள், நான்கு டி20 உலகக் கோப்பைப் போட்டிகள், சாம்பியன்ஸ் கோப்பை போன்ற இரு 50 ஓவர் போட்டிகள் என புதிய ஆட்ட அட்டவணையை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி. ஆனால் ஐசிசியின் இந்த முடிவுகளுக்கு பிசிசிஐ மட்டும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இதனால் இந்த விவகாரத்திக் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள கங்குலி எடுக்கும் முடிவு தான் முக்கிய அம்சமாக இருக்கப் போகிறது. 

பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி மனு சாவ்னேவுக்கு எழுதிய கடிதத்தில், கூடுதலான 50 ஓவர் போட்டி, ஐசிசி ஆட்ட அட்டவணையைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார். 2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டங்களில் 2018, 2022 ஆகிய வருடங்களில் எந்தவொரு ஐசிசி போட்டியும் இல்லை என்பதால் அதில் மாற்றம் கொண்டுவர ஐசிசி முடிவெடுத்து இதுபோன்ற ஒவ்வொரு வருடமும் ஒரு ஐசிசி போட்டி நடக்கவேண்டும் என்று புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளது. 

ஆனால் இதை பிசிசிஐயால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களுக்குத்தான் பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்கும். இதர நாடுகளிடம் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தைக் காப்பாற்ற பிசிசிஐ விரும்புகிறது. 2023-க்குப் பிறகான ஆட்ட அட்டவணை சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. ஐசிசி போட்டிகளை அதிகப்படுத்துவதால் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களை அது நிச்சயம் பாதிக்கும். எனவே இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும் என்று பிசிசிஐயின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போல நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கூடுதலான ஐசிசி போட்டி ஒன்று நடந்தால் அதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது ஐசிசியின் வாதமாக உள்ளது. மேலும் அக்டோபர் 23 முதல் தான் கங்குலி தலைமையிலான புதிய பிசிசிஐ நிர்வாகம் பொறுப்பேற்கவுள்ளது. எனவே அதற்குப் பிறகுதான் ஐசிசியின் புதிய முடிவுகள் குறித்து சம்மதம் தெரிவிக்க முடியும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. 

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக ஐசிசியின் இந்தப் புதிய ஆட்ட அட்டவணை குறித்த தனது சம்மதத்தையோ எதிர்ப்பையோ உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். ஐசிசி தவிர எல்லா நாடுகளும் ஐசிசியின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் இந்தச் சிக்கலை கங்குலி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதித்து வருகிறார்கள். பிசிசிஐயின் வருமானத்துக்கு இழப்பு ஏற்படாமல் அதேசமயம் ஐசிசியுடன் மோதல் போக்கையும் ஏற்படுத்தாமல் எந்த அளவுக்கு சுமூகமாக இந்த விவகாரத்தைக் கையாளப் போகிறார் என்பதே புதிய பிசிசிஐ தலைவர் கங்குலியின் முதல் சவாலாக இருக்கப் போகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com