சர்ச்சைக்குரிய சூப்பர் ஓவர் விதிமுறையை நீக்கியது ஐசிசி! புதிய விதிமுறை அமலுக்கு வந்தது!

உலகக் கோப்பைப் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய சூப்பர் ஓவர் விதிமுறையை நீக்கியது ஐசிசி! புதிய விதிமுறை அமலுக்கு வந்தது!
Published on
Updated on
1 min read

2019 உலகக் கோப்பைப் போட்டி சமீபத்தில் நிறைவுபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடிமுடிந்த நிலையில் ஆட்டம் சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

எனினும் சூப்பர் ஓவர் வழியாக முடிவைக் கண்டடையாமல் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஐசிசியின் விதிமுறைக்குப் பலத்த கண்டனம் எழுந்தது. இதுபோன்ற தர்க்கம் இல்லாத விதிமுறைகளை மாற்றவேண்டும் என்றும் பல தரப்பிலிருந்தும் ஐசிசிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் குழப்பத்தைச் சரிசெய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் பிக் பாஷ் லீக் டி20 போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இனிமேல் சூப்பர் ஓவர் டை நிலைக்குப் பிறகு பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணி தேர்ந்தெடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. முதல் சூப்பர் ஓவருக்குப் பிறகும் ஸ்கோர்கள் சமமாக இருந்தாலும் அடுத்ததாக முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்களைக் கொண்டு ஆட்டம் நடைபெறும் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாகப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடைந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்யும் பழைய நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உலகக் கோப்பைப் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 50 ஓவர், டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் எந்த ஆட்டம் டை-யில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நாக் அவுட் ஆட்டங்களில் மட்டுமே சூப்பர் ஓவர் நடைமுறை இருந்தது. லீக் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் புள்ளிகள் இரு அணிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com