கடமையைச் செய்ய தவறிவிட்டேன்: ஷகிப் அல் ஹசன்

கிரிக்கெட்டில் ஊழலைத் தடுக்கும் விஷயத்தில் தான் தனது கடமையைச் செய்ய தவறிவிட்டதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


கிரிக்கெட்டில் ஊழலைத் தடுக்கும் விஷயத்தில் தான் தனது கடமையைச் செய்ய தவறிவிட்டதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபடக்கோரி சூதாட்டக்காரர் ஒருவர் அணுகியது குறித்த தகவலை வங்கதேச கிரிக்கெட் ஆல்-ரௌண்டர் ஷகிப் அல் ஹசன் ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்கவில்லை. இந்த குற்றத்துக்காக ஐசிசி அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, ஷகிப் அல் ஹசன் தெரிவிக்கையில்,"நான் விரும்பும் விளையாட்டில் இருந்து என்னை தடை செய்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆனால், அது குறித்த அணுகுமுறைகளை ஐசிசியிடம் தெரிவிக்காததற்கான தண்டனையை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காக ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு வீரர்களையே பிரதானமாகச் சார்ந்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் நான் எனது கடமையைச் செய்யவில்லை.

பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களைப்போல், எனக்கும் கிரிக்கெட் ஊழல் இல்லாத விளையாட்டாக இருக்க வேண்டும். ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆதரித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதை எதிர்நோக்கியுள்ளேன். நான் செய்த அதே தவறை இளம் வீரர்கள் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து, ஐசிசி பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவிக்கையில், 

"ஷகிப் அல் ஹசன் மிகுந்த அனுபவம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர். அவர் பல்வேறு விழிப்புணர்வு அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். அதனால், விதிப்படி அவர் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து அவருக்கு தெரியும். இதுதொடர்பான ஒவ்வொரு அணுகுமுறைகளையும் அவர் தெரிவித்திருக்க வேண்டும்.

ஷகிப் தனது தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார். அதேசமயம் அவர் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைத்தார். வரும் நாட்களில் தான் செய்த அதே தவறை இளம் வீரர்கள் செய்யாமல் இருக்க அவர்களுக்கு உதவும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு ஷகிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com