பிரியாணியைத் தொடக்கூடாது: கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிய கட்டளை!

பிரியாணியைச் சாப்பிடக்கூடாது, இனிப்புப் பலகாரங்களைக் கையில் தொடக்கூடாது என்று உங்களிடம் ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்?
பிரியாணியைத் தொடக்கூடாது: கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிய கட்டளை!

பிரியாணியைச் சாப்பிடக்கூடாது, இனிப்புப் பலகாரங்களைக் கையில் தொடக்கூடாது என்று உங்களிடம் ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படியொரு வாழ்க்கையே தேவையில்லை என்று அந்தக் கட்டளைக்குக் கீழ்படியமாட்டீர்கள். சரிதானே?

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வேறு வழியில்லை. சொல்பவர் தலைமைப் பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவர் என பெரிய பதவிகளைக் கொண்டிருப்பவர் என்பதால் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறத் தவறியதை அடுத்து, அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தரின் ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீட்டிக்கவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 3 ஆண்டுகளுக்கு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராகவும் மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காகச் சில புதிய கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார். தேசியப் பயிற்சி முகாமில் உள்ள வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஆகியோர் உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ள உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று மிஸ்பா உல் ஹக் கட்டளை பிறப்பித்துள்ளார். 

43 வயது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியில் அதிகப் பங்களிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. தேசியப் பயிற்சி முகாம், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இனிமேல் பிரியாணியைத் தொடக் கூடாது, இனிப்புப் பண்டங்கள் மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிகப்பு இறைச்சி உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பதிலாக, பார்பிகியூ உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உண்ணவேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேசத் தரத்துக்கு இணையான உடற்தகுதியுடன் இல்லை என்று உலகக் கோப்பைப் போட்டியின்போது விமரிசனங்கள் எழுந்ததால் அதனையொட்டி இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com