நிர்வாகிகள் தேர்தலை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அதன் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம்
நிர்வாகிகள் தேர்தலை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அதன் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது. எனினும், தேர்தல் முடிவுகளின் அறிவிப்பு, நீதிமன்றத்தின் முடிவுக்கு உள்பட்டது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்தத் தடை விதித்து உச்சதிமன்றம் கடந்த ஆண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வரைவு அரசமைப்பு விதிகளை இறுதி செய்யும் விவகாரத்தில், தீர்ப்பு வழங்கப்படும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை அளித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. 
அப்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்விடம் கேட்டுக் கொண்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகிகள் குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பரக் திரிபாதி, தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட இதர சங்கங்கள் பிசிசிஐ-இன் அரசமைப்பு விதிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் விரும்பிய வழியில் செல்கிறார்கள் என்றார். 
அப்போது, நீதிபதிகள் அமர்வு, அவர்கள் விருப்பம் போல் செய்ய முடியும். ஆனால், தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் முடியும் அல்லது சிவில் நீதிமன்றத்திற்கு அனுப்பவும் முடியும் என்றனர்.
இந்த விவகாரத்தை சிவில் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் என்றார்.
அப்போது, நீதிபதிகள், டிஎன்சிஏ தேர்தலை நடத்த அனுமதி அளிக்கிறோம். இதன் முடிவுகள் சட்டத்தின் கீழ் உள்ள நிவாரணத்திற்கு உள்படும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப இருக்கும். தகுதி நீக்க விவகாரத்தைப் பொருத்தமட்டில், பிசிசிஐ-இன் புதிய அரசமைப்பு ஷரத்துகள் நிர்வாகிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் பி.எஸ். நரசிம்மா, மாநில கிரிக்கெட் சங்கங்களில் பெரும்பாலானவை உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும், பிசிசிஐயின் அரசமைப்பு விதிகளையும் பின்பற்றுகின்றன. ஆனால், தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட நான்கு சங்கங்கள் இன்னும் பின்பற்றவில்லை என கூறினார். 
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிசிசிஐயின் புதிய வரைவு அரசமைப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் ஒருமாதத்திற்குள் புதிய அரசமைப்பைக் கடைப்பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த விதிகளைப் பின்பற்றாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com