பார்படாஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சைக் கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சஸ்ஸக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரைப் பற்றிக் கூறினார். இதையடுத்து சஸ்ஸக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்தார். 2016-ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகவும் விளையாடியதால் அதிகக் கவனம் பெற்றார். அவரை டி20 கிளப்புகள் மொய்க்க ஆரம்பித்தன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடியவர், கடந்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் அறிமுகமானார். கடந்தவருட ஐபிஎல் ஏலத்தில், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. அதுவரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளிலும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்ற ஆர்ச்சரை உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. கடைசியில் அந்த அணி உலகக் கோப்பையை வெற்றி பெற ஆர்ச்சரும் முக்கியக் காரணமாக அமைந்தார். தற்போது, இங்கிலாந்து அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-2 என சமன் செய்ததற்கு ஆர்ச்சர் முக்கியக் காரணம். இதன் அடிப்படையில் தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராகி விட்டார்.