ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி ஆட்டம்: கோல் மழை பொழிந்து இந்தியா அபாரம்!

ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் ஆடவர் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் ஆடவர் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பெல்ஜியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி பெல்ஜியத்துக்கு எதிராக 3 ஆட்டங்களிலும், ஸ்பெயினுக்கு எதிராக 2 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணி இன்று (சனிக்கிழமை) ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில், முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்பிறகு, இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் 24-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கோல் கணக்கைத் துவக்கி வைத்தார். அடுத்த 4-வது நிமிடத்தில் ஹர்மன்பீர்த் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவை 2-0 என முன்னிலைப் பெறச் செய்தார். இதையடுத்து, முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு முன் ஸ்பெயின் அணியும் தனது முதல் கோலை அடித்தது. இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்தியா 2-1 என்ற நிலையில் இருந்தது. 

இதன்பிறகு, 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இந்த முன்னிலை மேலும் வலுப்பெறும் வகையில் நீலகண்ட சர்மா 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால், இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

அதேசமயம், ஸ்பெயின் அணியை இந்த சரிவில் இருந்து மீளவிடாமலும் இந்திய அணி கவனித்துக் கொண்டது. இதனால், அந்த அணி மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 56-வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 5-1 என முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து, 59-வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி, அதையும் கோலாக மாற்றி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி கோலை ரூபிந்தர்பால் சிங் அடித்தார்.

பெல்ஜியம் பயணத்தின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணி நாளை மீண்டும் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. 

எதிர்வரும் போட்டிகள் அட்டவணை:

3-வது போட்டி: ஸ்பெயின் - இந்தியா (செப்டம்பர் 29)

4-வது போட்டி: பெல்ஜியம் - இந்தியா (அக்டோபர் 1)

5-வது போட்டி: பெல்ஜியம் -  இந்தியா (அக்டோபர் 3)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com