கொரிய ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வியடைந்தார் காஷ்யப்

கொரிய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் பாருபல்லி காஷ்யப் தோல்வியடைந்தார்.
பாருபல்லி காஷ்யப் (கோப்புப்படம்)
பாருபல்லி காஷ்யப் (கோப்புப்படம்)


கொரிய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் பாருபல்லி காஷ்யப் தோல்வியடைந்தார். 

கொரிய ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டி இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான பி.வி. சிந்து, சாய்னா நேவால், சாய் பிரணீத் உள்ளிட்டோர் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், பாருபல்லி காஷ்யப் மட்டும் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் அவர் உலகின் நம்பர்-1 வீரரான ஜப்பானின் கென்டோ மொமடோவை எதிர்கொண்டார். இதில் முதல் கேமின் தொடக்கத்தில் இருந்தே மொமடோ ஆதிக்கம் செலுத்தி வந்தார். 9-5, 18-10, 20-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த மொமடோ முதல் கேமை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். 

தொடர்ந்து நடைபெற்ற 2-வது கேமிலும் மொமடோவே ஆதிக்கம் செலுத்தி மிக விரைவில் 7-2 என முன்னிலைப் பெற்றார். இதன்பிறகு, சற்று எழுச்சி கண்ட காஷ்யப் மொமடோவுக்கு நெருக்கடியளித்தார். இதன்மூலம், தொடர்ச்சியாக 5 புள்ளிகளைப் பெற்ற காஷ்யப் 7-11 என புள்ளிகள் வித்தியாசத்தை குறைத்தார். இதன்பிறகு, தனது 2 ஸ்மாஷ் மூலம் 11-12 என மொமடோவை நெருங்கி அசத்தினார் காஷ்யப்.

ஆனால், மீண்டும் எழுச்சி கண்ட மொமடோ தொடர்ச்சியாக 6 புள்ளிகளைப் பெற்று 19-13 என அசத்தலான முன்னிலைப் பெற்றார். இறுதியில் இரண்டாவது கேமையும் 21-15 என கைப்பற்றி மொமடோ வெற்றி பெற்றார். 

இதன்மூலம், பாருபல்லி காஷ்யப் 13-21, 15-21 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை பாருபல்லி காஷ்யபும், கென்டோ மொமடோவும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இரண்டு முறையும் கென்டோ மொமடோவே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருந்தார். இந்த ஆதிக்கம் தற்போது 3-0 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com