சிஎஸ்கே அணியை இந்தக் காரணத்துக்காகத்தான் பிடிக்காது: ஸ்ரீசாந்த்

சிஎஸ்கே அணியை இந்தக் காரணத்துக்காகத்தான் பிடிக்காது: ஸ்ரீசாந்த்

நான் சிஎஸ்கே அணியை எந்தளவுக்கு வெறுப்பேன் என அனைவருக்கும் தெரியும்...
Published on

ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடைக்காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே.ஜெயின் (நீதிபதி ஓய்வு) சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால் வரும் 2020 செப்டம்பர் மாதத்துடன் அவரது தடைக்காலம் முடிவடைகிறது. அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் பேடி உப்டன், தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஸ்ரீசாந்த் அவமரியாதை செய்தார் என எழுதியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ளார் ஸ்ரீசாந்த். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பேடி உப்டன், உங்கள் மனத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், நான் உங்களை எப்போதாவது அவமரியாதை செய்துள்ளேனா? சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் விளையாட வேண்டும் அவரிடம்  பலமுறை கோரிக்கை வைத்தேன். ஒரே காரணம், அதற்கு முந்தைய ஆட்டங்களில் சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் நன்றாக விளையாடியதுதான். அவர்களைத் தோற்கடிக்க விரும்பினேன். ஏதோ நான் ஃபிக்ஸிங்குக்காக விளையாட எண்ணியதாக அவர் மாற்றிவிட்டார்.

நான் சிஎஸ்கே அணியை எந்தளவுக்கு வெறுப்பேன் என அனைவருக்கும் தெரியும். இதற்கு - தோனி, என். சீனிவாசன் அல்லது வேறு ஏதாவது காரணங்களைப் பலரும் சொல்வார்கள். ஆனால் அவற்றில் உண்மை எதுவுமில்லை. எனக்கு மஞ்சள் வண்ணத்தைப் பிடிக்காது. அதே காரணத்துக்காகத்தான் ஆஸ்திரேலிய அணி மீதும் எனக்கு வெறுப்பு உண்டு. முக்கியமாக, சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் நன்றாக விளையாடியுள்ளேன். அதனால் தான் அந்த ஆட்டத்தில் விளையாட  எண்ணினேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com