தோனியால் மீண்டது சென்னை
By DIN | Published On : 01st April 2019 12:37 AM | Last Updated : 01st April 2019 12:37 AM | அ+அ அ- |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 175 ரன்களை குவித்தது.
சென்னை அணி ஏற்கெனவே இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தான் 2 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை தரப்பில் அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பமே அதிர்ச்சி: அம்பதி ராயுடு 1, வாட்சன் 13, கேதார் ஜாதவ் 8 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களுடன் சென்னை தடுமாறிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து தோனி-ரெய்னா இணை சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 11-ஆவது ஓவரின் போது 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எடுத்திருந்தது சென்னை.
சரிவில் இருந்து மீட்ட தோனி-ரெய்னா: தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை அணியை தோனி-ரெய்னா இணை மீட்டது. 4 ஓவர்களில் 42 ரன்களை சேர்த்த நிலையில், 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்த ரெய்னா, உனதிகட் பந்தில் போல்டானார். 16-ஆவது ஓவரில் தான் சென்னை அணி 100 ரன்களை கடக்க முடிந்தது.
தோனி 21-ஆவது ஐபிஎல் அரைசதம்: பொறுப்புடன் ஆடி வந்த கேப்டன் தோனி, பவுண்டரி மூலம் தனது 21-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த பிராவோ 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார்.
ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தோனி: கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது சென்னை.
கடைசி ஓவரில் 28 ரன்கள்: தலா 4 சிக்ஸர், பவுண்டரியுடன் 46 பந்துகளில் 75 ரன்களுடன் தோனியும், 8 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் அவுட்டாகாமல் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2-17 விக்கெட்டை வீழ்த்தினார்.