தீபக் சஹார் நான்கு ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசக்கூடாது: மும்பை அணிக்கு யோசனை சொல்லும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் யாராவது ஒருவர் தீபக் சஹார் பந்துவீச்சை அடிக்கவேண்டும்...
தீபக் சஹார் நான்கு ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசக்கூடாது: மும்பை அணிக்கு யோசனை சொல்லும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் இடையிலான ஐபிஎல் ஆட்டம் மும்பையில் இன்றிரவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்குத் தடை போடுமா மும்பை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் தீபக் சஹார் மிகச்சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். சென்னையில் மூன்று வெற்றிகளிலும் சத்தமில்லாமல் பங்களித்துள்ளார் வேகபந்துவீச்சாளரான தீபக் சஹார். இத்தனைக்கும் 3 ஆட்டங்களிலும் அவர் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். 

எனினும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கில்லியாக இருக்கிறார் சஹார். 3 ஆட்டங்களிலும் விளையாடி குறைந்த ரன்களைக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் சஹார் தான் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டங்களிலும் 12 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். எகானமி - 4.66. இந்தப் பட்டியலில் அடுத்த இரு இடங்களிலும் சிஎஸ்கே வீரர்களே உள்ளார்கள். 2. இம்ரான் தாஹிர் 5.20, ஜடேஜா 6.10. அதேபோல டாட் பந்துகளிலும் சாஹர் தான் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டங்களிலும் வீசிய 12 ஓவர்களில் 36 பந்துகளை டாட் பந்துகளாக வீசியுள்ளார். அடுத்த இடத்தில் 35 டாட் பந்துகளுடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளார். மேலும் 3 ஆட்டங்களிலும் பவர்பிளே பகுதியில் பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து சென்னை அணிக்குப் பேருதவி செய்துள்ளார் சஹார். இதனால் பவர்பிளேவில் அதிக ரன்களைக் கொடுப்பது குறித்த கவலையைத் தோனிக்கு இல்லாமல் செய்துவிட்டார். 

2012-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வான தீபக் சஹார், 2016, 2017-ம் ஆண்டுகளில் புணே அணிக்காக விளையாடினார். 26 வயது சஹாரைக் கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ரூ. 80 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை அணி. கடந்த வருடம் 12 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை எடுத்தார் சஹார். எகானமி - 7.28. இந்நிலையில் இந்த வருடமும் அசத்தலான பந்துவீச்சால் சென்னை அணிக்குத் தகுந்த வெற்றி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

இதையடுத்து முன்னாள் வீரரும் மும்பையைச் சேர்ந்தவருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மும்பை அணிக்கு ஓர் யோசனையைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

மும்பை இந்தியன்ஸ் அணியில் யாராவது ஒருவர் தீபக் சஹார் பந்துவீச்சை அடிக்கவேண்டும். அதன்மூலம் அவரை தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசச் செய்யக்கூடாது. இதனால் தோனியை மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தக் கட்டாயப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com