சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து, சாய்னா
By DIN | Published On : 11th April 2019 01:20 AM | Last Updated : 11th April 2019 01:20 AM | அ+அ அ- |

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் முதலில் ஆடிய சிந்து, இந்தோனேஷியாவின் லையானி அலெக்ஸாண்ட்ரா மெய்னாகியை 21-9, 21-7 என்ற நேர் செட்களில் 27 நிமிடங்களில் வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து, அடுத்த சுற்றில் டென்மார்க்கின் மியா பிலிஷ்ஃபெல்டெட்டை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில், உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், இந்தோனேஷியாவின் யூலியா யோசஃபின் சுசான்டோவை 21-16, 21-11 என்ற நேர் செட்களில் வென்றார்.
சாய்னா தனது 2-ஆவது ஆட்டத்தில், தாய்லாந்தின் பார்ன்பவி சோசுவாங்கை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் 16-ஆம் நிலையில் உள்ள சமீர் வர்மா 21-14, 21-6 என்ற செட்களில் தாய்லாந்தின் சுபன்யு அவிஹிங் சனோனை வீழ்த்தினார். உலகின் 21-ஆம் நிலையில் இருக்கும் ஹெச்.எஸ். பிரணாய் 11-21, 21-16, 21-18 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டெஸ்ஸை தோற்கடித்தார்.
பி.காஷ்யப் 21-19, 21-14 என்ற செட்களில் டென்மார்கின் ராஸ்மஸ் கெம்கேவை வீழ்த்தினார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற செட்களில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை வென்றார். எனினும், சாய் பிரணீத் 21-19, 21-14, 22-20 என்ற செட்களில் உலகின் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமொடாவிடம் போராடி வீழ்ந்தார்.
இதில், காஷ்யப்-சீனாவின் சென் லாங்கையும், சமீர் வர்மா-சீனாவின் லு குவாங்ஸுவையும், ஹெச்.எஸ். பிரணாய்-ஜப்பானின் கென்டோ மொமொடாவையும், ஸ்ரீகாந்த்-டென்மார்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் சோல்பர்கையும் எதிர்கொள்கின்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனவ் ஜெர்ரி சோப்ரா/சிக்கி ரெட்டி இணை 21-18, 21-7 என்ற செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான அர்ஜுன்/ மணீஷாவை வீழ்த்தியது. எனினும், அதே பிரிவில் மற்றொரு இந்திய இணையான செளரப் சர்மா/அனோஷ்கா பாரிக் 12-21, 12-21 என்ற செட்களில் தாய்லாந்தின் தீசாபோல்/சாப்சிரி ஜோடியிடம் வீழ்ந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில், இந்தியாவின் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை 13-21, 17-21 என்ற செட்களில் சிங்கப்பூரின் டேனி பவா கிறிஸ்டினா/லோ கீன் ஹீன் ஜோடியிடம் வீழ்ந்தது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G