ஸ்மித், வார்னரை இரு வருடங்களுக்குத் தடை செய்திருக்க வேண்டும்: அம்ப்ரோஸ் ஆவேசம்!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடத் தடைக்குப் பதிலாக இரு வருடங்கள் தடை செய்திருக்க...
ஸ்மித், வார்னரை இரு வருடங்களுக்குத் தடை செய்திருக்க வேண்டும்: அம்ப்ரோஸ் ஆவேசம்!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடத் தடைக்குப் பதிலாக இரு வருடங்கள் தடை செய்திருக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் அம்ப்ரோஸ் கூறியுள்ளார்

கடந்த வருடம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் சார்பில் இந்தத் தடையை நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மூன்று வீரர்களின் தடை தொடரும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது. இருவரும் தற்போது தடைக்காலம் முடிந்து ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்கள். விரைவில் அறிவிக்கப்படவுள்ள ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியிலும் இடம்பெறவுள்ளார்கள்.

இந்நிலையில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஒரு வருட தடைக்காலம் மிகக்குறைவு, அவர்களை இரு வருடங்களுக்குத் தடை செய்திருக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் அம்ப்ரோஸ் கூறியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

விதிமுறையை அதுபோல ஒருவர் மீறும்போது அவருக்குத் தக்க தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஸ்மித்தும் வார்னரும் கொலைக்குற்றத்திலிருந்து தப்பித்துள்ளார்கள். ஒரு வருடத் தடை என்பது மிகக்குறைவு. இரு வருடத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் தான் அது எந்தளவுக்கு முட்டாள்தனமானது என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கும். இருவரும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என நம்புகிறேன். அதுபோன்ற தவறை அவர்கள் மீண்டும் செய்யக்கூடாது. வீரர்களைச் சுற்றி இத்தனை கேமராக்கள் இருக்கும்போது அவர்கள் இத்தவறைச் செய்துள்ளார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அது கருப்புத் தினம். எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். விதிமுறைகளை மீறாமல் தீவிரமாக விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com