Enable Javscript for better performance
Prithvi Shaw suspended for doping violation- Dinamani

சுடச்சுட

  

  ஊக்க மருந்தைப் பயன்படுத்திய புகாரில் பிரித்வி ஷா செய்த தவறு என்ன?: விளக்கும் மருத்துவர்!

  By எழில்  |   Published on : 03rd August 2019 11:33 AM  |   அ+அ அ-   |    |  

  prithivi_shaw1dd

   

  தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்திய புகார் தொடர்பாக இந்திய கிரிக்கெட் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  19 வயதே ஆன இளம் வீரர் பிரித்வி ஷா, கடந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ஆடி ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த பிரித்வி, சையத் முஷ்டாக் அகமது டி20 போட்டியில் பங்கேற்று ஆடினார். அப்போது அவர் தடை செய்யப்பட்ட டெர்புடலைன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியதாகச்  சோதனையில் தெரியவந்தது. இந்த ஊக்க மருந்து இருமலுக்கான மருந்தில் கலந்திருக்கும். மருத்துவர்களின் அறிவுரையின்றித் தானாக இருமலுக்கான மருந்தை வாங்கி இந்தச் சிக்கலில் மாட்டியுள்ளார் பிரித்வி ஷா. இதையடுத்து, அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் 8 மாதங்கள் பங்கேற்கத் தடை விதித்துள்ளது பிசிசிஐ. இதனால் அவர் மார்ச் 16 முதல் நவம்பர் 15 வரையிலான காலத்துக்கு விளையாட முடியாது.

  இந்த விவகாரம் குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியதாவது:

  விளையாட்டு வீரர்கள் மற்றும் மருத்துவர்கள் கவனத்திற்கு... ஓட்டம், நீச்சல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பளு தூக்குதல், குண்டு எரிதல் போன்ற பல போட்டிகளில் மாவட்ட அளவு , மண்டல அளவு , மாநிலப் போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் என்னைப் போன்ற மருத்துவர்களின் கவனத்திற்கு...

  விளையாட்டு வீரர்கள் பொதுவாக விளையாட்டு விதிகளை மதித்து விளையாடுவார்கள். ஆனாலும் சிலர் தங்களின் திறனை மேம்படுத்துவதற்காகச் சில வகை மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். இவற்றை திறன் மேம்படுத்தும் திறன் ஊக்கிகள் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் Performance enhancers எனப்படும்.

  இத்தகைய மருந்துகளை உட்கொண்டு விளையாடும் வீரர்கள் அதிகமான திறனை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்கள். இதைத் தடுப்பதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (World Anti Doping Agency, WADA) செயல்படுகிறது. அனைத்து நாடுகளில் இயங்கும் அனைத்து விளையாட்டுத் துறைகளும் இதன் கீழ் வரும். இதன்படி போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி எடுக்கப்படும்.

  WADA வருடா வருடம் கூடி தவிர்க்கப்பட வேண்டிய மருந்துகள் அட்டவணையை வெளியிடும். அதில் சில மருந்துகள் சில விளையாட்டுகளில் மட்டும் தடை செய்யப்படுபவை. சில மருந்துகள் விளையாட்டு நடக்கும் போது மட்டும் தடை செய்யப்பட்டவை. சில மருந்துகள் எப்போதும் உட்கொள்ளத் தடை செய்யப்பட்டவை என்று வகைப்படுத்தப்படும்.

  இந்த அட்டவணையை ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரியாமல் கூட இந்த மருந்துகளை உட்கொள்ளுதல் தவறு.

  பிரித்வி ஷா விசயத்தில் நடந்ததும் இது தான்.

  பிரித்விஷா 19 வயதாகும் இந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர். இவர் தெரிந்து தவறு செய்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு.

  காரணம் இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனக்கு ஏற்பட்ட சளிக்கு மருத்துவரை அணுகாமல் ஓவர் கவுண்ட்டர் மருந்தாக ஒரு சிரப் வாங்கிப் பருகியுள்ளார்.

  அந்த சிரப்பில் "டெர்புடலின்" எனும் மருந்து இருக்கிறது. அது WADA அமைப்பால் எப்போதும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் வருகிறது.

  டெர்புடலின் மருந்து, சளி - இருமலுக்கு நுரையீரல் கிருமித்தொற்றில் உபயோகப்படும் மருந்து தான். ஆனாலும் அது நுரையீரலின் ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவை அதிகப்படுத்தும். இதனால் வீரர் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்
  இதனால் அந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

  ஒருவேளை அதை மருந்தாக உட்கொள்ளத்தேவை இருந்தால் Therapeutic exemption certificate-ஐ WADA-விடம் வாங்க வேண்டும். ஆனால் பாவம் ப்ரித்விக்கு அது தெரியவில்லை. அவரது சிறுநீரில் அந்த மருந்து இருந்ததால் தடை செய்யப்பட்டுவிட்டார்.

  நல்ல விஷயம் என்னவென்றால் பிசிசிஐ அவரை அப்பாவி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. வரும் நவம்பர் 15 மட்டுமே தடை. பிறகு எப்போதும் போல விளையாடலாம்.

  இதன் மூலம் இளம் விளையாட்டு வீரர்களுக்கான பாடம் உள்ளது.

  1. உங்களுக்கு வரும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு முறையான மருத்துவரை அணுகவும்

  2. ஓவர் தி கவுண்ட்டரில் வாங்கி உண்ணக்கூடாது

  3. உங்களுக்கு கட்டாயம் WADA-வின் தடை செய்யப்பட்ட மருந்துகள் அட்டவணை தெரிந்திருக்க வேண்டும்

  4. உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் கட்டாயம் அந்த அட்டவணையைக் காட்டி விட வேண்டும்.

  5. மருத்துவர்களாகிய நாம் ஒருவேளை விளையாட்டு வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை வந்தால், எப்படி கர்ப்பிணிகளுக்குத் தனிக்கவனம் எடுப்போமோ, அதைப்போல மருந்துகள் உபயோகிப்பில் கவனம் எடுக்க வேண்டும்.
  காரணம் ஒரு தடை செய்யப்பட்ட மருந்து ஒரு வீரனது வாழ்க்கையை முடித்து விடலாம்

  எல்லாருக்கும் ப்ரித்வி போன்று அதிர்ஷ்டம் இருக்காது. உங்களுக்குத் தெரிந்த தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்லுங்கள் என்று எழுதியுள்ளார்.

  மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai