தங்கப் பெண்ணே: 21 ஆட்டங்கள், 2 வெள்ளி, 2 வெண்கலம், 1 தங்கம்!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் இது. இதற்கு முன்பு...
தங்கப் பெண்ணே: 21 ஆட்டங்கள், 2 வெள்ளி, 2 வெண்கலம், 1 தங்கம்!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் சிந்து. இதன் மூலம் இறுதிச் சுற்று ஆட்டங்களில் தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் மட்டுமே வெல்பவர் என்ற விமர்சனத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்தார். 

நேற்று நடைபெற்ற போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து, ஆட்டம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். இரண்டு கேம்களையும் 21-7, 21-7 என்ற புள்ளிக் கணக்கில் ஆட்டத்தையும் தங்கத்தையும் கைப்பற்றினார். கடும் சவாலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஒகுஹரா எந்தவித எதிர்ப்பும் இன்றி சிந்துவிடம் சரண் அடைந்தார். 38 நிமிடங்களில் வெற்றியை தன் வசப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் பி.வி. சிந்து. அதன் விவரம்:

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து

2013 - வெண்கலம்
2014 - வெண்கலம்
2017 - வெள்ளி
2018 - வெள்ளி
2019 - தங்கம்

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் இது. இதற்கு முன்பு இந்தப் போட்டியில் 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது இந்தியா.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா 

1983 - வெண்கலம் (பிரகாஷ் படுகோன்)
2011- வெண்கலம் (ஜுவாலா கட்டா & அஸ்வினி பொன்னப்பா)
2013 - வெண்கலம் (சிந்து)
2014 - வெண்கலம் (சிந்து)
2015- வெள்ளி (சாய்னா நெவால்)
2017 - வெள்ளி (சிந்து)
2017 - வெண்கலம் (சாய்னா நெவால்)
2018 - வெள்ளி (சிந்து)
2019 - வெண்கலம் (சாய் பிரணீத்)
2019 - தங்கம் (சிந்து)

* ஒகுஹராவுக்கு எதிராக மொத்தமாக 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிந்து, 9-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

* 2006 முதல் 21 புள்ளிகள் கொண்ட கேம் நடைமுறையை பின்பற்றிவருகிறது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி. அதற்குப் பிறகு இறுதிச்சுற்றில் மிகக்குறைந்த புள்ளிகளை விட்டுக்கொடுத்தது சிந்து தான். நேற்று ஒகுஹராவால் இரு கேம்களிலும் மொத்தமாக 14 புள்ளிகள் மட்டுமே பெறமுடிந்தது. 

* 2013 முதல் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறார் சிந்து. இந்தப் போட்டியில் அவர் இதுவரை 21 ஆட்டங்களில் வென்றுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்த வீராங்கனையும் இத்தனை ஆட்டங்களை வென்றதில்லை. மூன்று முறை உலக சாம்பியனான கரோலினா மரின் 20 வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். 

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இதற்கு முன்பு 5 பதக்கங்களைப் பெற்ற வீராங்கனையாக சீனாவின் ஸாங் நிங் மட்டுமே இருந்தார். தற்போது சிந்துவும் 5 பதக்கங்களுடன் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார். 

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று முறை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற 3-வது வீராங்கனை- சிந்து. இதேபோல மூன்று இறுதிச்சுற்றுகளில் விளையாடிய 6-வது வீராங்கனை.

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆறு முறை பங்கேற்று 5 பதக்கங்களைப் பெற்றுள்ளார் சிந்து. வேறு எந்த வீராங்கனையும் 5 பதக்கங்களை இந்தக் குறுகிய காலகட்டத்தில் வென்றதில்லை. 

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீராங்கனைகளிடம் சிந்து தோற்றதேயில்லை. அவர்களுக்கு எதிரான 7 ஆட்டங்களிலும் அவர் வென்றுள்ளார். இவர்களில் 6 சீன வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்.

* பாட்மிண்டன் வரலாற்றில் ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்திலும் வரிசையாகப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து மட்டுமே. 2016 ரியோ ஒலிம்பிக்ஸ், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2018 காமன்வெல்த் கேம்ஸ் போட்டி என அனைத்திலும் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 

* 2016 முதல் 16 இறுதிச்சுற்றுகளில் பங்கேற்றுள்ளார் சிந்து. அதில் 5-ல் வெற்றியும் 11-ல் தோல்வியும் அடைந்துள்ளார். 

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற முதல் ஆறு தடவையும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார் சிந்து. வேறு எந்த வீராங்கனைக்கும் இந்தப் பெருமை கிடையாது. 

*இந்த வருடம் விளையாடிய போட்டிகளில் இது சிந்துவின் 2-வது இறுதிச்சுற்று. கடந்த மாதம் இந்தோனேஷிய ஓபன் போட்டியில் தோல்வியடைந்த சிந்து, இந்தப் போட்டியில் வென்றுள்ளார். 

* கோபிசந்துடன் பயிற்சி பெறுவது மட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தென்கொரியாவின் முன்னாள் வீராங்கனை கிம் ஜி ஹைனுடன் இணைந்து கடந்த சில மாதங்களாகப் பயிற்சி பெற்று வருகிறார் சிந்து. அதற்கான பலன் உடனடியாகக் கிடைத்துள்ளது.  

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது முறையாக இரு பதக்கங்களைப் பெற்றுள்ளது இந்தியா. 2017-ல் சாய்னா வெண்கலமும் சிந்து வெள்ளியும் வென்றார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com