விளையாட்டு 2019

கத்தாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
விளையாட்டு 2019


ஜனவரி

6: கத்தாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு நாடுகளிடம் 2-0 எனவும், பஹ்ரைனிடம் 1-0 எனவும் தோல்வியுற்று வெளியேறியது இந்தியா.

7: சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டம் கடைசி நாள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் 2-1 என முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது இந்தியா. இதன் மூலம் 71 ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. கோலியும் ஆஸி.யில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றை படைத்தார். 

11: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி இந்திய அணி வீரர்கள் ஹார்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ.

15: தமிழகத்தின் டி. குகேஷ் உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெறறார். சக வீரரான பிரக்ஞானந்தா வைத்திருந்த சாதனையை இதன் மூலம் அவர் தகர்த்தார். 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாள்கள் இருக்கையில் குகேஷ் இச்சாதனையை நிகழ்த்தினார்.

22: 2018-இல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஐசிசி ஒருநாள் சிறந்த வீரர் விருது மற்றும் டெஸ்ட் வீரர் விருதுகளையும், சர் கேரி பீல்ட் சோபர்ஸ் விருதையும் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார் கோலி.

27: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி  பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார். ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 500 போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார். 


பிப்ரவரி

2: கொல்கத்தாவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை 3-1 செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இத்தாலி அணி.

18: செர்பியாவின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் லாரஸ் உலகின் சிறந்த வீரர் விருதை 4-ஆவது முறையாக பெறறார். 

21: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது பிசிசிஐ. உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிசிசிஐ மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயின் நியமிக்கப்பட்டார்.

24: புது தில்லியில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றதின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் செளரவ் செளதரி.

மார்ச்

15: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு தொடர்பாக வீரர் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 

18: பாகிஸ்தானுடன் ஏற்பட்ட அரசியல் பதற்றம் காரணமாக ஆசிய ஜூனியர் மல்யுத்தம் போட்டி நடத்தும் வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து தட்டிப் பறித்தது உலக மல்யுத்த சம்மேளனம்.

21: அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக், உலக போட்டியில் இந்தியா 85 தங்கம், 154 வெள்ளி, 129 வெண்கலம் உள்பட 368 பதக்கங்களை கைப்பற்றியது.
ஏப்ரல்

14: 11 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அமெரிக்காவின் நட்சத்திர கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் தனது 5-ஆவது மாஸ்டர்ஸ் மற்றும் 15-ஆவது பெரிய பட்டத்தை கைப்பற்றினார்.

25: பெங்களுருவில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 6-4 என ஈரானின் ஹெதாரியை வீழ்த்தி பட்டம் வென்றார்

மே

1: உடலில் உள்ள டெஸ்டர்டோன் ஹார்மோன் அளவு தொடர்பாக தென்னாப்பிரிக்காவின் 800 மீ. மகளிர் ஒலிம்பிக் சாம்பியன் கேஸ்டர் செமன்யாவின் முறையீட்டு மனுவை சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் நிராகரித்தது. இது வீராங்கனைகள் மத்தியில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.

12:  ஐபிஎல் 2019 சீசனில் பட்டம் வென்றதின் மூலம் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சிறப்பை பெற்றது மும்பை இந்தியன்ஸ். ஹைதராபாதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை.

19: இந்தியாவின் இளம் ஓட்டப்பந்தய வீராங்கனையான தூத்தி சந்த், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

21: ஆசிய சாம்பியன்ஷிப் தடகளத்தில் 800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக தடை விதிக்கப்பட்டது.

30: ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவிலும், அஞ்சும் மொட்கில்-திவ்யான்ஷ்சிங் பன்வர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவிலும் தங்கம் வென்றனர்.

ஜூன்

1: மாட்ரிடில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டி இறுதிச் சுற்றில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை வீழ்த்தி 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.

8: பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மார்கெட்டாவை வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றினார்.

10: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

16: தமிழக வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 17-ஆது முறையாக தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். 
30: உலகக் கோப்பை ஒருநாள் போட்டியின் ஒரு பகுதியாக இங்கிலாந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியுற்றது இந்தியா.

ஜூலை

2: இலங்கை வீரர் சங்ககாராவுக்கு அடுத்து ஓரே உலகக் கோப்பையில் 4 சதங்கள் அடித்த 2-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. 

6: இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, ஒரே உலகக் கோப்பை போட்டியில் 5 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார். 

10: ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்ற நியூஸிலாந்து எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெறும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இந்தியா வெளியேறியது. 

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக தடகளப் போட்டியில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் தூத்தி சந்த் 11.32 விநாடிகளில் கடந்து தங்கம் வஎன்றார். 

14: லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் 5 மணி நேரம் நடந்த ஆட்டத்தில் மூத்த வீரர் பெடரரை 3-2 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் நியூஸிலாந்தின் கடும் சவாலை முறியடித்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து. இரு அணிகளின் ஸ்கோர் டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. இங்கிலாந்தின் 15 ரன்கள் இலக்கை, நியூஸிலாந்து அணியும் எடுத்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் பட்டம் வென்றது இங்கிலாந்து.

30: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆகஸ்ட்

4: இந்திய பாட்மிண்டன் இணையான சத்விக்-சிராக் ஷெட்டி தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 சீரிஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியன்கள் லி ஜின் ஹி-லியு சென்னை வீழ்த்தி பட்டம் வென்றனர்.

14: எஸ்டோனியா தலின் நகரில் நடைபெற்ற ஜூனியர் உலக மல்யுத்தப் போட்டியில் 18 வயது பிரிவு உலக சாம்பியன் பட்டம் வென்றார் தீபக் புனியா.

15: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

16: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்தது பிசிசிஐ சிஏச.

21: புவனேசுவரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டி ஆடவர், மகளிர் பிரிவில் இந்தியா பட்டம் வென்றது.

25: ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பி.வி.சிந்து.  38 நிமிடங்களில் 21-7, 21-7 என்ற கணக்கில் நவோமி ஒஹுஹராவை வென்றார்.

27: இந்தியாவின் 22- வயது சுமித் நாகல், யுஎஸ் ஓபன் போட்டியில் ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கு எதிராக 1 செட்டை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


செப்டம்பர்

7: நியூயார்க்கில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் போட்டியில் மகளிர் இறுதிச் சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ûஸ நேர் செட்களில் வென்று முதல் பட்டம் வென்றார் கனடாவின் பியான்கா. அதே போல் ஆடவர் பிரிவில் நடால் 4-ஆவது முறையாக பட்டம் வென்றார்.

26: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அக்டோபர்

10: ரஷியாவின் உலன் உடே நகரில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று 8-ஆவது பதக்கம் வென்ற ஓரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் மேரி கோம். 

கால்பந்து ஆட்டங்களை மகளிர் காண்பதற்கான 38 ஆண்டுக்கால தடையை க்கியது ஈரான்.

12: 14 வயது சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 18 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

13: அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25-ஆவது பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

23: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் 33 மாதங்கள் சிஓஏ நிர்வாகம் முடிவுக்கு வந்தது.

நவம்பர்

10: வங்கதேச அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் தீபக் சாஹர்.

டிசம்பர்

9: ஊக்க மருந்து சோதனையை விவரங்களில் முறைகேடு செய்த புகார் எதிரொலியாக ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம்.

11:  மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

22: மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது கோலி தலைமையிலான இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com