டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓரம் கட்டப்படுகிறாரா அஸ்வின்?
By -பா.சுஜித்குமார். | Published On : 06th February 2019 01:35 AM | Last Updated : 06th February 2019 01:35 AM | அ+அ அ- |

ஏற்கெனவே ஒருநாள், டி 20 அணிகளில் இடம் பெறாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓரம் கட்டப்படுகிறாரா முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் என கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தமிழகத்தில் இருந்து வெங்கட்ராகவன், எல்.சிவராமகிருஷ்ணன், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் பரிணமித்தனர்.
கடந்த 1986-இல் சென்னையில் பிறந்த அஸ்வின், சிறந்த ஆப்,பிரேக் பந்துவீச்சாளராகவும், ஆல் ரவுண்டராகவும் விளங்குகிறார். தற்போது தமிழகம், இந்திய அணிகளிலும், ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் ஆட்டங்களில் 50, 100, 150, 200, 250, 300 விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2016-இல் ஐசிசி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றுள்ளார்.
2010-இல் இந்திய அணியில் சேர்ப்பு: கடந்த 2010-இல் முதன்முதலில் இந்திய அணியில் இணைந்த அஸ்வின் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். 2011-இல் உலகக் கோப்பை வென்ற அணியிலும், 2013-இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். டெஸ்ட் ஆட்டங்களில் 336, ஒருநாள் ஆட்டங்களில் 150, டி20 ஆட்டங்களில் 52, முதல்தர ஆட்டங்களில் 500 விக்கெட்டுகளையும் தன் பங்குக்கு வீழ்த்தியுள்ளார்.
உள்ளூர் மண்ணில் நடைபெற்ற பல்வேறு டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ள அஸ்வின் கடந்த 2016-இல் கோலி கேப்டன் ஆனது முதல் ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களுக்கான இந்திய அணியில் இடம் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு அஸ்வின் காயத்தால் பாதிக்கப்பட்டது, பார்மில் இல்லாதது போன்றவை காரணங்களாக கூறப்பட்டன. குறிப்பாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க தொடர்களிலும் அஸ்வின் சிறப்பாக தான் பந்துவீசினார். கடந்த 2017-இல் ஆன்டிகுவாவில் மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி ஒரு நாள் ஆட்டத்திலும், அதே ஆண்டில் கிங்ஸ்டனில் அதே அணிக்கு எதிரான டி20 ஆட்டத்திலும் விளையாடியதே அஸ்வின் கடைசி ஆட்டங்களாகும்.
அதன் பின்னர் குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல், ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் சுழற்பந்து வீச்சுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். பின்னர் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்த அவர் 2018-இல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசினார் . இங்கிலாந்து பயணத்திலேயே காயமுற்றார். பின்னர் உள்ளூரில் நடந்த மே.இ.தீவுகள் தொடரில் சிறப்பாக பந்துவீசினார்.
ஆஸி. தொடரில் மீண்டும் காயம்:
இதற்கிடையே அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் முதல் ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு உதவினார். பின்னர் அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட காயத்தால், பெர்த் டெஸ்ட் உள்பட தொடர் முழுவதும் ஆடமுடியாமல் போய்விட்டது.
ஓரம் கட்டப்படுகிறாரா?
இந்நிலையில் அயல்நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் அஸ்வினை விட, குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதனால் டெஸ்ட் ஆட்டங்களிலும் அஸ்வின் ஓரம் கட்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது காயத்தால் பாதிக்கப்பட்டு அஸ்வின் சிகிச்சை பெற்று வருகிறார். டெஸ்ட் அணியில் அவரை சேர்க்காமல் ஓரம் கட்ட முடியாது. மீண்டும் குணமடைந்து அவர் சிறப்பாக ஆடுவது நிச்சயம் எனத் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...