முதல் டி20யில் இந்திய அணி தோல்வி! பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய நியூஸிலாந்து அணி!

டி20 ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியின் மோசமான தோல்வி இது...
முதல் டி20யில் இந்திய அணி தோல்வி! பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய நியூஸிலாந்து அணி!

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை வென்று சாதனை படைத்த இந்திய அணி, தொடர்ச்சியாக நியூஸிலாந்தில் ஒரு நாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. ஏற்கெனவே ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், ரிஷப் பந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, கிருனாள் பாண்டியா, புவனேஸ்வர், சாஹல், கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றார்கள். 

முதல் ஓவரில் மட்டும்தான் நியூஸி. தொடக்க வீரர்கள் சாந்தமாக விளையாடினார்கள். அதன்பிறகு சிக்ஸரும் பவுண்டரிகளும் பறந்தன. புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தார்கள் சைஃபர்டும் மன்ரோவும். கலீல் அஹமது வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர் அடித்தார் மன்ரோ. அந்த ஓவரில் 16 ரன்கள்! கிருனாள் பாண்டியா வீசிய 5-வது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் எடுக்கப்பட்டது. என்ன செய்தால் இந்த ஜோடியைப் பிரிக்கமுடியும் என்று தவித்தார் ரோஹித் சர்மா. யார் பந்துவீசினாலும் அதை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்ட இருவரும் தயாராக இருந்தார்கள். அடுத்த ஓவரில் பாண்டியா வீசினார். அதிலும் மாற்றம் எதுவும் இல்லை. 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் எடுத்தார்கள். 

நியூஸிலாந்து பவர்பிளேயில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. 

தன்பிறகு மன்ரோ 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டது. கிருனாள் வீசிய 11-வது ஓவரில் சைஃபர்ட் 2 சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் நியூஸி. அணிக்கு 17 ரன்கள் கிடைத்தன. சாஹல் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்கள் எடுத்ததோடு 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து அணி.

இந்திய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய சைஃபர்ட் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில், கலீல் அஹமது வீசிய யார்க்கர் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியினர் புதிய உற்சாகத்துடன் ஆட்டத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்தார் கேப்டன் வில்லியம்சன். எனினும் தினேஷ் கார்த்தின் அற்புதமான கேட்சினால் அறிமுக வீரர் மிட்செல் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவரின் அடுத்தப் பந்தில் வில்லியம்சன் சாஹல் பந்துவீச்சில் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கிராண்ட்ஹோம் 3 ரன்களில் வெளியேறினார். 2 சிக்ஸர் அடித்த டெய்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுபோல ஆறு முன்னணி பேட்ஸ்மேன்கள் வெளியேறிய பிறகும் அதிரடியாக விளையாட நியூஸிலாந்து அணியிடம் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய ஸ்காட் குக்ஜெலெஜின், தான் எதிர்கொண்ட அனைத்து பந்துகளையும் சிக்ஸரும் பவுண்டரிக்கும் விரட்ட முயன்றார். இதனால் அவர் 7 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் சாண்ட்னர் 7 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பாண்டியா 2 விக்கெட் எடுத்தாலும் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினார். 

2016 ஆகஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக 245 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு வேறு எந்த அணியும் இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களை எடுக்கவில்லை. இன்று நியூஸிலாந்து அணி தனது பலத்தை நிரூபித்து இந்திய அணி பந்துவீச்சைப் பதம் பார்த்துவிட்டது.

ஆரம்பம் முதல் சறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய அணி 3-வது ஓவரில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை 1 ரன்களில் இழந்தது. அடுத்ததாக ரிஷப் பந்த் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவன், இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் எடுத்தார். ஃபெர்குசன் பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்து ஒரு நீண்ட இன்னிங்ஸுக்குத் தயாரான நிலையில் 6-வது ஓவரில் ஃபெர்குசன் பந்தில் 29 ரன்களுடன் போல்ட் ஆகி வெளியேறினார். விஜய் சங்கர் 5-வது ஓவரில் ஒரு சிக்ஸரும் இரு பவுண்டரிகளும் அடித்து தன்னை 3-வதாகக் களமிறக்கியதற்கு நியாயம் செய்தார். இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.

மிகப்பெரிய ஸ்கோரை விரட்ட வேண்டும் என்பதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒருவித அழுத்தத்துக்கு ஆளானார்கள். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 10 பந்துகள் வரை எதிர்கொண்டும் ரிஷப் பந்தால் ஒரு பவுண்டரியும் அடிக்கமுடியாமல் போனது. அவர் 4 ரன்களில் சாண்ட்னர் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்திய பேட்ஸ்மேன்களில் நம்பிக்கையுடன் விளையாடி 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த விஜய் சங்கர், பந்த் ஆட்டமிழந்த அடுத்த 2-வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று 27 ரன்களில் வெளியேறினார். இதேபோல சிக்ஸர் அடிக்க முயன்று பலனளிக்காமல் தினேஷ் கார்த்திக் 5 ரன்களிலும் பாண்டியா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

இந்திய அணி போலில்லாமல் நியூஸிலாந்து அணியின் ஃபீல்டிங் அற்புதமாக இருந்ததால் இந்திய அணியினரால் தப்பிக்கமுடியாமல் போனது. கடகவென இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியின் தோல்வி ஆட்டத்தின் பாதியிலேயே உறுதியானது. எனினும் கடைசிக்கட்டத்தில் தோனியும் கிருனாள் பாண்டியாவும் ஓரளவு ரன்கள் சேர்த்தார்கள். அது, ரன்கள் அளவிலான தோல்வியின் வித்தியாசத்தைக் குறைப்பதற்கு மட்டுமே உதவியது. கிருனாள் பாண்டியா 20 ரன்களிலும் புவனேஸ்வர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். ஓரளவு தாக்குப்பிடித்த தோனி, 31 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியாக சாஹலும் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி மறக்கக்கூடிய ஒரு டி20 ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் மட்டும் எடுத்து 80 ரன்களில் வித்தியாசத்தில் தோற்றது. டி20 ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியின் மோசமான தோல்வி இது. இதற்கு முன்பு 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதுதான் பெரிய தோல்வியாக இருந்தது. அதை இன்றைய டி20 ஆட்டம் மாற்றியுள்ளது.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தாத ஆட்டம் இது. அடுத்த ஆட்டத்திலாவது இந்திய அணி நியூஸிலாந்துக்குப் பதிலடி 2-வது டி20 ஆட்டம் வெள்ளியன்று, ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com