சர்வதேச ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்த மூன்றாவது இந்திய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் சென்னையின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன். தற்போது அவர் 97-ஆம் இடத்தில் உள்ளார்.
ஏடிபி சார்பில் அவ்வப்போது சர்வதேச அளவில் டென்னிஸ் வீரர்களின் ஆட்டம், வெற்றிகளை பொறுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 103-ஆவது இடத்தில் இருந்து வந்தார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதியில் போராடி தோல்வியுற்றார் பிரஜ்னேஷ்.
கடந்த 10 ஆண்டுகளில் சோம்தேவ் தேவ் வர்மன், யூகி பாம்ப்ரி ஆகியோருடன் முதல் 100 இடங்களில் நுழைந்த மூன்றாவது இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஆவார்.
100 இடங்களுக்குள் தனது தரவரிசையை அவர் பராமரித்து வந்தால், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரதான சுற்றுகளில் தகுதி பெற உதவும்.
அண்மைக்காலமாக காயங்களில் அவதிப்பட்டு வரும் யூகி பாம்ப்ரி ஒவ்வொரு முறையும் 100 இடங்களுக்குள் நுழையும் போது, மீண்டும் காயமடைந்து நீண்ட கால ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ராம்குமார் ராமநாதன் 128-ஆவது இடத்திலும், பாம்ப்ரி 156, சாகேத் மைனேனி 255, சசிகுமார் முகுந்த் 271-ஆம் இடங்களில் உள்ளனர்.
இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 37, திவிஜ் சரண் 39, லியாண்டர் பயஸ் 75, ஜீவன் நெடுஞ்செழியன் 77, பூர்வ ராஜா 100 இடங்களில் உள்ளனர்.
மகளிர் தரவரிசையில் அங்கிதா ரெய்னா 3 இடங்கள் முன்னேறி 165-ஆவது இடத்தில் உள்ளார். கர்மன் கெளர் தண்டி 211-ஆம் இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.