உங்களுக்கு ஆண்களைப் பிடிக்குமா?: ரூட்டுடனான வாக்குவாதம் குறித்து கேப்ரியல் விளக்கம்!

எங்கள் இருவருக்குமிடையே என்ன நடந்தது என்று பலரும் கேட்கிறார்கள். அதைச் சொல்லவேண்டிய கடமை எனக்கு உள்ளது...
உங்களுக்கு ஆண்களைப் பிடிக்குமா?: ரூட்டுடனான வாக்குவாதம் குறித்து கேப்ரியல் விளக்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. எனினும் டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இந்த டெஸ்ட் ஆட்டத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷன்னான் கேப்ரியல் - இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தன்பாலின உறவு குறித்து கேப்ரியல் விமரிசனம் செய்ததாகக்  கூறப்பட்டது. இதற்கு, இந்தச் சொல்லை ஒருவரை அவமானப்படுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டாம். தன்பாலின உறவாளராக இருப்பதில் தவறில்லை என்று பதிலளித்தார் ரூட். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. எனினும் கேப்ரியல் பேசிய சொற்கள் மைக்கில் பதிவாகவில்லை.

இதையடுத்து ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக கேப்ரியல் மீது கள நடுவர்கள் புகார் அளித்தார்கள். இதன் விளைவாக, 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாட கேப்ரியலுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆட்ட ஊதியத்திலிருந்து 75% அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கேப்ரியல்.  அதில் அவர் கூறியுள்ளதாவது:

மே.இ. மற்றும் இங்கிலாந்து அணி வீரர்களிடம் முக்கியமாக ஜோ ரூட்டிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அப்போது அதுபோல பேசியது புண்படுத்தாத, விளையாட்டுத்தனமான ஒரு வாக்குவாதம் தான் என எண்ணினேன். ஆனால் இப்போது மனத்தைப் புண்படுத்தக்கூடிய வார்த்தைகள் அவை என்பதை உணர்கிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். எங்கள் இருவருக்குமிடையே என்ன நடந்தது என்று பலரும் கேட்கிறார்கள். அதைச் சொல்லவேண்டிய கடமை எனக்கு உள்ளது. 

மிகவும் பரபரப்பான தருணத்தில் அச்சம்பவம் நடைபெற்றது. நான் பந்துவீச முயன்றபோது என்னை உற்றுப் பார்த்தார் ரூட். இது ஒரு உளவியல் சார்ந்த உத்தியாக இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு இது வழக்கமானது. அதை நான் கண்டுபிடித்து, உஷ்ணமான அந்தத் தருணத்தில், உங்களுக்கு ஆண்களைப் பிடிக்குமா என்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் அளித்ததுதான் மைக்ரோபோனில் பதிவாகியுள்ளது. இந்தச் சொல்லை ஒருவரை அவமானப்படுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டாம். தன்பாலின உறவாளராக இருப்பதில் தவறில்லை என்று பதிலளித்தார் ரூட். அதற்கு நான் அளித்த பதில், எனக்கு அதில் பிரச்னையில்லை. ஆனால் நீங்கள் என்னைப் பார்த்து புன்னகை செய்வதை நிறுத்தவேண்டும் என்றேன். 

ஜோ ரூட்டும் நானும் இதுகுறித்து பிறகு விவாதித்தோம். எங்களிடையே எவ்வித கருத்துவேறுபாடுகளும் இல்லை. இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரம் ஆகும் என இருவருமே அப்போது எதிர்பார்க்கவில்லை. இதை எனக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறேன். உரையாடல்களில் மரியாதையாகப் பேசவேண்டும் என்பதை அறிந்துகொள்ள இதை ஒரு வாய்ப்பாக விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com