சிட்னி டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா 389/5
By DIN | Published On : 04th January 2019 07:49 AM | Last Updated : 04th January 2019 07:49 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸி. அணிகள் இடையிலான 4-ஆவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை சிட்னி மைதானத்தில் தொடங்கியது. ஏற்கெனவே டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது. அதன் பின்னர் 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் தொடங்கியது. இதில் அடிலெய்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் ஆஸி. 146 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றன.
முக்கியமான மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட்டை இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதை முறியடிக்கும் வகையில் சிட்னி டெஸ்டில் வெற்றி அல்லது குறைந்தது டிரா செய்ய இந்திய அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.முதன்முறையாக ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவோ தொடரை 2-2 என சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என கருதப்படுவதால் இரு அணிகளும் அதற்கு முக்கியத்துவம் தந்துள்ளன. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம் போல் ராகுல் 9 ரன்களிலேயே ஹேஸல்வுட் பந்துவீச்சில் மார்ஷிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் லயன் பந்துவீச்சில் அவுட்டானார்.
புஜாரா ஒருபுறம் நிலைத்து ஆடிக் கொண்டிருக்க, அகர்வாலுக்கு பின் கேப்டன் விராட் கோலி இணைந்தார். 4 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 23 ரன்களுடன் ஹேஸல்வுட் பந்தில் பெய்னிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அயல்நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடுபவரான துணை கேப்டன் ரஹானே இத்தொடரில் சரிவர ஆடவில்லை. அதே போல் முதல் இன்னிங்ஸிலும் 55 பந்துகளில் 18 ரன்களோடு ஸ்டார்க் பந்துவீச்சில் வெளியேறினார். ரோஹித் சர்மா பெண் குழந்தை பிறந்ததால் நாடு திரும்பிய நிலையில் அவரது 6--ம் நிலை இடத்துக்கு ஹனுமா விஹாரி இறக்கப்பட்டார்.
புஜாராவும்-ஹனுமா விஹாரியும் இணைந்து அற்புதமாக ஆடி ரன்களை உயர்த்தினர். 5 பவுண்டரிகளை விளாசிய ஹனுமா 39 ரன்களை எடுத்திருந்தார். ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 303 ரன்கள் என வலுவான நிலையில் உள்ளது இந்தியா. புஜாரா 130 ஹனுமா 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று இந்தியா தனது 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுததிய ஹனுமா விறாரி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 181 ரன்களுடனும், பன்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.