புரோ வாலிபால் லீக்: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி இணையதளம், சின்னம் அறிமுகம்
By DIN | Published On : 04th January 2019 01:07 AM | Last Updated : 04th January 2019 01:07 AM | அ+அ அ- |

அறிமுக விழாவில் பங்கேற்ற இந்திய வாலிபால் சம்மேளன தலைவர் வாசுதேவன், பொதுச் செயலாளர் ராம்அவதார் சிங், அணி உரிமையாளர் ராஜசேகரன் சிவப்பிரகாசம் மற்றும் வீரர்கள்.
புரோ வாலிபால் லீக் அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் சீருடை, சின்னம், இணையதளம் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் வாலிபால் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தவும், இந்திய வீரர்களுக்கு ஆட்டத்திறனை மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும் புரோ வாலிபால் லீக் 2019 தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய வாலிபால் சம்மேளனம் (விஎஃப்ஐ)-பேஸ்லைன் வெஞ்சர்ஸ் நிறுவனம் இணைந்து இதற்காக ஒப்பந்தம் செய்து லீக் போட்டிகளை நடத்துகின்றன. கொச்சி, சென்னை என இரு நகரங்களில் 1 மாத காலம் போட்டி நடக்கவுள்ளது.
இந்நிலையில் ஆமதாபாத் டிபன்டர்ஸ், காலிக்கட் ஹீரோஸ், யு மும்பை வாலி, ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ், உள்ளிட்ட 6 அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் அறிமுக விழா நடைபெற்றது.
ஸ்பார்டன்ஸ் அணியில் ரூடி வெர்ராஃப் (கனடா), ஐகான் வீரர் அகின் ஜாஸ், ஷெல்டன் மோசஸ், பாக்கியராஜ், நவீன் ராஜா ஜேக்கப், விபின் ஜார்ஜ், பிறைசூடன், கபில்தேவ், ஹரிஹரன், அஸ்வின், பிரபாகரன், ஷிகர், நரேஷ் உள்ளிட்ட 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தலைமைப் பயிற்சியாளராக எம்.எச்.குமரா, துணை பயிற்சியாளராக ரமேஷ், அணி மேலாளராக ஜே.நடராஜன் செயல்படுவர்.
ஸ்பார்டன் அணி உரிமையாளர் ராஜசேகரன் சிவப்பிரகாசம் அணியின் சின்னத்தை அறிமுகம் செய்தார். இந்திய வாலிபால் சம்மேளனத் தலைவர் வாசுதேவன், பொதுச் செயலாளர் ராம் அவதார் ஜாக்கர் சீருடையை அறிமுகம் செய்தனர். அணி இயக்குநர் ஹாமினி ரெட்டி இணைதளத்தை தொடங்கி வைத்தார்.
அணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: இந்திய வாலிபால் சம்மேளனத் தலைவர் வாசுதேவன் கூறியதாவது: வாலிபால் விளையாட்டை மேம்படுத்தவும், அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் புரோ வாலிபால் லீக் உதவும். முந்தைய லீக் போட்டியை போல் இல்லாமல் இந்த முறை வெற்றிகரமாக போட்டிகளை நடத்த முழு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விஎஃப்ஐ அனைத்து விதமான ஆதரவையும் பேஸ்லைன் வெஞ்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும்.
தற்போது 6 அணிகள் தொடக்க போட்டியில் ஆடவுள்ளன. அடுத்த ஆண்டு 8 அல்லது 10 அணிகள் இடம்பெறலாம். தற்போதே அதிக விண்ணப்பங்கள் வருகின்றன.
நாடு முழுவதும் வாலிபாலுக்கு என தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. சிறந்த வெளிநாட்டு வீரர்களும் இதில் இடம் பெறுவதால், இந்திய வீரர்களின் ஆட்டத்திறன் மேம்படும் என்றார்.
6 தமிழக வீரர்கள்
அணி மேலாளர் ஜெயக்குமார் நடராஜன் கூறியதாவது:
இளம் வீரர்களுக்கு பிவிஎல் போட்டிகள் ஒரு உத்வேகமாக அமையும். ஐகான் வீரராக நியமிக்கப்பட்டுள்ள அகின் ஜாஸ் ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்.
கனடா, ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற ரூடி ùர்ஹாஃப் இடம் பெறுவது நமது வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும். இந்திய அணியின் செட்டர் கபில்தேவ் இடம் பெற்றுள்ளது அணிக்கு பலத்தை தந்துள்ளது. ஏனைய அணிகளும் சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளன. சென்னையில் போட்டிகள் நடப்பதால் எங்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
ஷெல்டன் மோசஸ், நவீன் ராஜா ஜேக்கப், பிரபாகரன், பிறைசூடந், பாக்கியராஜ், உள்பட 6 தமிழக வீரர்களும் உள்ளனர் என்றார்.
பிப்.2-இல் பிவிஎல் தொடக்கம்: வரும் பிப்.2-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பிவிஎல் போட்டிகள் முதல் கட்டம் கொச்சியிலும், இரண்டாம் கட்டம் சென்னையிலும் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.