சிட்னி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 622/7 டிக்ளேர்! புஜாரா 193, பந்த் 159*, ஜடேஜா 81 ரன்கள்!

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவேண்டுமென்றால் புதிய வரலாறு படைத்தாகவேண்டும்... 
சிட்னி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 622/7 டிக்ளேர்! புஜாரா 193, பந்த் 159*, ஜடேஜா 81 ரன்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. புஜாரா 130, விஹாரி 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றும் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பைப் பின்னுக்குத் தள்ளியது. மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிய விஹாரி, 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ரிஷப் பந்தும் இந்திய அணியின் ரன் வேட்டையைத் தொடர்ந்தார்கள். அதிக ஓவர்கள் ஆடவேண்டும் என்று இந்திய அணி திட்டமிட்டிருந்ததால் ரிஷப் பந்த் பக்குவமாக விளையாடினார். தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்தினார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, புஜாராவின் இரட்டைச் சதத்தை அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார். லயன் அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 418. இதனால் இந்திய அணி 500 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்தும் ஜடேஜாவும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மேலும் பதம் பார்த்தார்கள். விரைவாக ரன்கள் எடுத்ததால் இந்திய அணியின் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. ரிஷப் பந்த் 137 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையையும் பெற்றார். இந்திய அணி 149-வது ஓவரில் 500 ரன்களைக் கடந்தது. இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டம் இந்திய ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தும் விதமாக அமைந்தது.

இதன்பிறகு ஜடேஜா, 89 பந்துகளில் அரை சதமெடுத்தார். கம்மின்ஸ் வீசிய 164-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து அசத்தினார் ஜடேஜா. கடந்த டெஸ்டில் அற்புதமாகப் பந்துவீசிய கம்மின்ஸ், இந்தமுறை 28 ஓவர்கள் வீசியபோதே 100 ரன்களுக்கும் அதிகமாகக் கொடுத்திருந்தார். இந்தச் சமயத்தில் ரிஷப் பந்தும் ஜடேஜாவும் ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என்கிற கணக்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் கடந்த டெஸ்டில் நிதானமாக விளையாடிய இந்திய அணி இந்த டெஸ்டில் பெரும்பாலான சமயங்களில் 3.50-க்கும் அதிகமான ரன் ரேட்டை வைத்திருந்தது. அட்டகாசமாக விளையாடிய ரிஷப் பந்த் 185 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையும் பந்துக்குக் கிடைத்துள்ளது (முதலிடத்திலுள்ள தோனி 224 ரன்கள் எடுத்துள்ளார்). மேலும் ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்களிலும் பந்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. (டிவில்லியர்ஸ் 2012-ல் பெர்த்தில் 169 ரன்கள் எடுத்தார்.)

இந்திய அணி ஜடேஜாவின் சதத்துக்காகக் காத்திருந்தது. ஆனால் அவர் 81 ரன்களில் லயன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது இந்திய அணி. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பந்த் - ஜடேஜா கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 224 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்த கூடுதலாக உதவியுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் குறிப்பிட்ட டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 595 ரன்களுக்கு அதிகமாக எடுத்து தோற்றதில்லை. (2017-ல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 595/8 எடுத்தது. பிறகு விளையாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 539 எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 160 ரன்களில் ஆட்டமிழக்க, 3 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து அசாத்தியமான வெற்றி கண்டது நியூஸிலாந்து.) இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவேண்டுமென்றால் புதிய வரலாறு படைத்தாகவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com