தொடர் வெற்றிக்கான பலமான அடித்தளம்: 500 ரன்களைக் கடந்தது இந்திய அணியின் ஸ்கோர்! ரிஷப் பந்த் சதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார்...
தொடர் வெற்றிக்கான பலமான அடித்தளம்: 500 ரன்களைக் கடந்தது இந்திய அணியின் ஸ்கோர்! ரிஷப் பந்த் சதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதமடித்துள்ளார். 

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. புஜாரா 130, விஹாரி 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றும் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறது. மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிய விஹாரி, 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ரிஷப் பந்தும் இந்திய அணியின் ரன் வேட்டையைத் தொடர்ந்தார்கள். அதிக ஓவர்கள் ஆடவேண்டும் என்று இந்திய அணி திட்டமிட்டிருந்ததால் ரிஷப் பந்த் பக்குவமாக விளையாடினார். தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்தினார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, புஜாராவின் இரட்டைச் சதத்தை அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார். லயன் அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 418. இதனால் இந்திய அணி 500 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்தும் ஜடேஜாவும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மேலும் பதம் பார்த்தார்கள். விரைவாக ரன்கள் எடுத்ததால் இந்திய அணியின் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. ரிஷப் பந்த் 137 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையையும் பெற்றார். இந்திய அணி 149-வது ஓவரில் 500 ரன்களைக் கடந்தது. 

இந்திய அணி 155 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 539 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 119, ஜடேஜா 42 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com