சிட்னி டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 303/4- புஜாரா சதம் 130, மயங்க் அகர்வால் 77

ஆஸி. அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
சிட்னி டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 303/4- புஜாரா சதம் 130, மயங்க் அகர்வால் 77


ஆஸி. அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. புஜாரா 130 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 77 ரன்களை விளாசினார்.
இந்தியா-ஆஸி. அணிகள் இடையிலான 4-ஆவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை சிட்னி மைதானத்தில் தொடங்கியது.
ஏற்கெனவே டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது. அதன் பின்னர் 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் தொடங்கியது. இதில் அடிலெய்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் ஆஸி. 146 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றன.
முக்கியமான மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட்டை இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதை முறியடிக்கும் வகையில் சிட்னி டெஸ்டில் வெற்றி அல்லது குறைந்தது டிரா செய்ய இந்திய அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.முதன்முறையாக ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க தீவிரமாக உள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவோ தொடரை 2-2 என சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என கருதப்படுவதால் இரு அணிகளும் அதற்கு முக்கியத்துவம் தந்துள்ளன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம் போல் ராகுல் 9 ரன்களிலேயே ஹேஸல்வுட் பந்துவீச்சில் மார்ஷிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.. 
அகர்வால் மீண்டும் அபாரம்: மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் லயன் பந்துவீச்சில் அவுட்டானார். புஜாரா ஒருபுறம் நிலைத்து ஆடிக் கொண்டிருக்க, அகர்வாலுக்கு பின் கேப்டன் விராட் கோலி இணைந்தார். 4 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 23 ரன்களுடன் ஹேஸல்வுட் பந்தில் பெய்னிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
ரஹானே சோகம்: அயல்நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடுபவரான துணை கேப்டன் ரஹானே இத்தொடரில் சரிவர ஆடவில்லை. அதே போல் முதல் இன்னிங்ஸிலும் 55 பந்துகளில் 18 ரன்களோடு ஸ்டார்க் பந்துவீச்சில் வெளியேறினார். 
அதிரடி ஹனுமா: ரோஹித் சர்மா பெண் குழந்தை பிறந்ததால் நாடு திரும்பிய நிலையில் அவரது 6--ம் நிலை இடத்துக்கு ஹனுமா விஹாரி இறக்கப்பட்டார். புஜாராவும்-ஹனுமா விஹாரியும் இணைந்து அற்புதமாக ஆடி ரன்களை உயர்த்தினர். 5 பவுண்டரிகளை விளாசிய ஹனுமா 39 ரன்களை எடுத்திருந்தார்.
ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 303 ரன்கள் என வலுவான நிலையில் உள்ளது இந்தியா. புஜாரா 130 ஹனுமா 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆஸி. தரப்பில் ஹேஸல்வுட் 2-51, ஸ்டார்க் 1-75, நாதன் லயன் 1-88 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
புஜாரா 18-ஆவது டெஸ்ட், தொடரில் 3-ஆவது சதம்: டெஸ்ட் ஆட்டங்களில் நிலைத்து ஆடுவதில் திராவிட்டை போல் வல்லவரான புஜாரா இந்த டெஸ்டில் தனது 18-வது மற்றும் இத்தொடரில் 3-ஆவது சதத்தை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்காக அவர் 250 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகளுடன் 130 ரன்களை எடுத்துள்ளார். 
12 ரன்களில் தப்பிய புஜாரா: 12 ரன்கள் எடுத்திருந்த புஜாரா பின்பக்கம் கேட்ச் பிடிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு முடிவில் இருந்து அவுட்டாகாமல் தப்பினார். பின்னர் நிலையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இத்தொடரில் அடிலெய்டில் 123, மெல்போர்னில் 106 ரன்களை எடுத்திருந்தார் புஜாரா.
பெளன்ஸரால் ஏமாந்த ரஹானே: ஆரம்பத்தில் சிறப்பாக ஆட முயன்ற ரஹானே, ஆஸியின் ஸ்டார்ஸ் வீசிய பெளன்ஸரால் ஏமாந்து அடிக்க முயன்று வீக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
குல்தீப், ஜடேஜா சேர்ப்பு: மூத்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் காயத்தில் இருந்து மீளாததால், சேர்க்கப்படவில்லை. சிட்னி மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளனர்.
ஆஸி. அணியில் மாற்றங்கள்: சரிவர ஆடாத தொடக்க வீரர் ஆரோன் பின்ச் இந்த டெஸ்டில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸுடன்-உஸ்மான் கவாஜா தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் ஆல்ரவுண்டருடன்,இடதுகை சுழற்பந்து வீச்சாளருமான மார்னஸ் லேபுஸ்சேன் மூன்றாம் நிலையில் இறங்குவார் எனத்தெரிகிறது.
மிச்செல் மார்ஷ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோலியை வெறுப்பேற்றிய ரசிகர்கள்
கேப்டன் கோலி மைதானத்தில் நுழைந்த போது, அவரை வெறுப்பேற்றி ரசிகர்கள் கூக்குரலிட்டனர். ஆனால் ஹேஸல்வுட்டின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்ததால் ரசிகர்கள் மெளனமாகினர்.

6-ஆவது முறையாக டாஸ் தோல்வி கண்ட பெய்ன்
7 டெஸ்ட் ஆட்டங்களில் ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் 6-ஆவது முறையாக டாஸில் வெற்றி பெறறவில்லை. சிட்னி பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக மாறும் ùன்பதால் இது ஆஸி. அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அச்சமற்ற அகர்வால்
இளம் வீரர் மயங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 76 ரன்களை எடுத்திருந்தார். அதே போல் சிட்னி டெஸ்டிலும் ஆஸி. பெளலர்களை எதிர்கொண்டார். ஆஸி. பெளலர்கள் அவருக்கு பெளன்ஸர்களை வீசி பயமுறுத்த முயன்றனர். 
ஒரு பந்து அவரது ஹெல்மெட்டில் பதம் பார்த்தது. ஆனால் அதிரடி ஓபனர் என்ற பெயரை நிலை நிறுத்தி அச்சமின்றி ஆடி 77 ரன்களை விளாசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com