1983, 2011 உலகக் கோப்பை வெற்றிகளை விடவும் இது மேலானது: டெஸ்ட் தொடர் வெற்றியை மெச்சும் கோலி & சாஸ்திரி!

ஆனால் எது உணர்வுபூர்வமானது என்று கேட்டால் இந்த டெஸ்ட் தொடர் வெற்றியைத்தான் சொல்வேன்.... 
1983, 2011 உலகக் கோப்பை வெற்றிகளை விடவும் இது மேலானது: டெஸ்ட் தொடர் வெற்றியை மெச்சும் கோலி & சாஸ்திரி!

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2011 உலகக் கோப்பை வெற்றி அணியில் நானும் பங்களித்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பு உலகக் கோப்பையை வெல்லாத உணர்வு என்னிடம் அப்போது இல்லை. சொந்த நாட்டில் விளையாடி, கடைசியாக உலகக் கோப்பையை வென்றபோது பல மூத்த வீரர்கள் உணர்வுபூர்வமாக இருந்தார்கள். நிச்சயம் அது ஓர் அருமையான நிகழ்வுதான் எனக்கு. ஆனால் எது உணர்வுபூர்வமானது என்று கேட்டால் இந்த டெஸ்ட் தொடர் வெற்றியைத்தான் சொல்வேன். ஏனெனில் இங்கு மூன்றாவது முறையாக வருகிறேன். இங்கு வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். அதேபோல ஓர் அணியாகக் கடந்த 12 மாதங்களில் பட்ட கடினமான சூழல்களையும் கருத்தில் கொண்டு இதைச் சொல்கிறேன். வெளிநாடுகளில் தொடரை வெல்லவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஒரு ஆட்டத்தில் மட்டும் வெல்லும் அணியாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்கான முயற்சியில் வென்று முழுமையடைந்தது போல உணர்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

இது எனக்கு மிகவும் திருப்திகரமான வெற்றி. உலகக் கோப்பை 1983, உலக சாம்பியன்ஷிப் 1985 வெற்றிகளை விடவும் இது மேலானது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் தான் கிரிக்கெட்டின் உண்மையான வகைமையாகும். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே கடினமான விளையாட்டாகும். கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் ஆர்வத்துடன் உணர்கிறார். ஆடுகளத்தில் ஆர்வத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான காதலையும் வெளிப்படுத்துவதில் கோலிக்கு நிகராக வேறு எந்த கேப்டனையும் சொல்லமுடியாது.  இந்த அணி எவ்வளவு கடினமாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறது என்று எனக்குத் தெரியும் என சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com