ஆசியக் கோப்பை கால்பந்து: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, ஜோர்டான் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வென்றன. தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
ஆசியக் கோப்பை கால்பந்து: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, ஜோர்டான் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வென்றன. தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
 ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பல்வேறு நகரங்களில் ஏஎஃப்சி கோப்பை 2019 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்
 7 ஆண்டுகள் கழித்து ஆசியக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவும்-தாய்லாந்தும் மோதிய ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது.
 தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முனைந்தனர். 21-ஆவது நிமிடத்தில் தாய்லாந்து வீரர் பன்ஸா தலையால் முட்டிய பந்தை அற்புதமாக தடுத்தார் இந்திய கோல் கீப்பர் குர்ப்ரீத்.
 27-ஆவது நிமிடத்தில் கேப்டன் சேத்ரி அடித்த பந்து தாய்லாந்து வீரர் தீரத்தோன் கையில் பட்டதால் பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. இதை சரியாக பயன்படுத்தி கோலடித்தார் சேத்ரி.
 இதனால் தாய்லாந்து அதிர்ச்சி அடைந்து பதிலடியில் ஈடுபட்டது.
 இதன் பலனாக 33-ஆவது நிமிடத்தில் அதன் கேப்டன் தீரஸில் டங்டா அற்புதமாக கோலடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
 சுனில் சேத்ரி இரண்டாவது கோல்: இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. கேப்டன் சேத்ரி 46-ஆவது நிமிடத்தில் உதாந்தாவிடம் இருந்து கிடைத்த பந்தை கோலாக மாற்றினார். இது அவரது 67-ஆவது சர்வதேச கோலாகும்.
 இதன் தொடர்ச்சியாக 68-ஆவது நிமிடத்தில் அனிருத் தாபா மூன்றாவது கோலை அடித்தார். 80ஆவது நிமிடத்தில் ஜிஜே லால்பெக்லுவா நான்காவது கோலை அடித்தார். இதன் மூலம் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
 ஆசிய கால்பந்து போட்டியில் 55 ஆண்டுகள் கழித்து இந்தியா பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். மேலும் வரலாற்றில் பெற்ற பெரிய வெற்றியும் ஆகும். அடுத்த ஆட்டத்தில் யுஏஇயுடன் மோதுகிறது.
 மெஸ்ஸியின் சாதனையை முறியடித்தார் சேத்ரி: 66-ஆவது சர்வதேச கோலை அடித்ததின் மூலம் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்தார். 85 கோல்களுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்திலும், 65 கோல்களுடன் மெஸ்ஸியும், சேத்ரியும் இரண்டாம் இடத்தில் இருந்தனர். தற்போது 66-ஆவது கோலை அடித்து உலகிலேயே இரண்டாவது அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார் சேத்ரி.
 ஆஸி. அதிர்ச்சித் தோல்வி: ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அல்அனிலில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது ஜோர்டான்.
 பலம் வாய்ந்த ஆஸி. அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்த போதிலும் ஜோர்டான் அணி தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதன் வீரர் பேனி யாசின் வெற்றி கோலை அடித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com