ரோஹித் ஷர்மா தான் உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர்: விராட் கோலி புகழாரம்
By Raghavendran | Published On : 03rd July 2019 11:10 AM | Last Updated : 03rd July 2019 11:29 AM | அ+அ அ- |

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தான் வெற்றிபெற முடிந்தது. அதிலும் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த லீக் போட்டி எங்களை மேலும் தயார்படுத்திக்கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும். நாங்கள் நேர்மறை எண்ணத்துடன் அரையிறுதியில் விளையாட உள்ளோம்.
5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது அதிரடி முடிவாக இருந்தாலும், அவ்வப்போது பந்துவீச்சு முறைகளை மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறோம். போட்டி தினத்தில் சிறந்த பதினோறு பேர் கொண்ட அணியுடன் களமிறங்குவதுதான் எங்கள் இலக்கு. அதனால் தான் அனைத்து போட்டிகளிலும் ஒரே அணியுடன் களமிறங்க இயலாமல் போகிறது. இந்த மாற்றங்களால் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளும் கிடைக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மா தான் உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர். ஏனென்றால் அவர் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய அளவில் ரன்களைக் குவிக்கிறார். அதேபோன்று இப்போதைய சூழலில் பும்ரா தான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்ற மாதிரி பந்துவீசுகிறார். ஹார்திக் பாண்டியா சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். பேட்டிங்கின் போது பந்துவீச்சாளராகவும், பந்துவீச்சில் பேட்ஸ்மேனாகவும் அந்த மனநிலையில் சிந்தித்து விளையாடுகிறார் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G