ஐபிஎல்-லை விட தேசிய அணி தான் முக்கியம்: தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சாடல்

தேசிய அணியில் இடம்பெறுவதான் முக்கியம் என தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஓடிஸ் கிப்ஸன் தெரிவித்தார். 
ஐபிஎல்-லை விட தேசிய அணி தான் முக்கியம்: தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சாடல்

ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துவதை விட தேசிய அணியில் இடம்பெறுவதான் முக்கியம் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்ஸன் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சிக்காலம் முடிவடையும் நிலையில், இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் தனது தேசிய அணியில் இடம்பெறுவதுதான் முக்கியமானது. மிக ஆடம்பரமாக இல்லையென்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகச்சிறந்தது. அதேபோன்று ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரையில் உலகக் கோப்பையை வெல்வதே ஒவ்வொரு அணியின் லட்சியமாக இருக்கும்.

அதை கைப்பற்றும்போது ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் ஐபிஎல் கோப்பைகளால் ஈட்டித் தர முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் போட்டிகளை விட தேசிய அணியில் இடம்பெறுவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒரு டி20 தொடரை நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் பெரும்பாலான சர்வதேச வீரர்கள் டி20 லீக் தொடர்களில் பங்கேற்கும் சூழல் ஏற்படுகிறது.

சர்வதேச அணியே இல்லாத கனடா கூட ஒரு டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இவையெல்லாம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நன்மையை ஏற்படுத்துமா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. நான் தென் ஆப்பிரிக்க அணியுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். எனவே எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

நடப்பு உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி லீக் சுற்றுகளுடன் வெளியேறியது. முன்னதாக, காயத்தில் இருந்து மீண்ட அந்த அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் மற்றும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா ஆகியோர் 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர்.

இதில் டேல் ஸ்டெயின் மீண்டும் காயமடைந்து உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். ரபாடாவும் காயம் காரணமாக முழுமையாகச் செயல்பட முடியாமல் திண்டாடினார். அதே சமயம் ஐபிஎல் கோப்பையை வென்றதுதான் தனது சிறப்பான தருணம் என டி காக் கூறியுள்ள நிலையில், ஓடிஸ் கிப்ஸனின் இந்தக் கருத்து வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com