பிரெஞ்சு ஓபன்: ஆஷ்லி பர்டி சாம்பியன்
By DIN | Published On : 09th June 2019 01:54 AM | Last Updated : 09th June 2019 01:54 AM | அ+அ அ- |

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை ஆஷ்லி பர்டி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டாவை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி பட்டம் வென்றார் பர்டி.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான இதன் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தொடர் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் மீண்டும் நடத்தப்பட்டது. முதல் அரையிறுதியில் பெடரரை வென்று நடால் இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளார்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் மோதினர். இதில் தீம் 6-2, 3-6, 7-5, 5-7, 7-5 என 5 செட் கணக்கில் போராடி வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் நடாலை எதிர்கொள்கிறார் தீம்.