உலக வில்வித்தை: இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர்
By DIN | Published On : 14th June 2019 01:02 AM | Last Updated : 14th June 2019 01:02 AM | அ+அ அ- |

உலக வில்வித்தை சாம்பியன் போட்டி ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் வலிமையான டச்சு அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நெதர்லாந்தின் டென்பாஸ்ச் நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஏற்கெனவே தருண்தீப் ராய், அதானுதாஸ், பிரவீண் ஜாதவ் உள்ளிட்டோர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பலமான டச்சு அணியை 5-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா. மற்றொரு அரையிறுதியில் சீனா 6-2 என கொரியாவை வீழ்த்தியது.
வரும் 16-ஆம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்றில் முதல் பட்டத்தை வெல்ல காத்துள்ளது இந்தியா. ஏற்கெனவே கடந்த 2005 மாட்ரிட் உலக போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றிருந்தது.
மகளிர் பிரிவில் சனிக்கிழமை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் துருக்கியை எதிர்கொள்கிறது இந்தியா.