ஜோஸ்பட்லரை மன்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்ததால் சர்ச்சை

ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ்பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட்டாக்கிய அஸ்வின்.
ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட்டாக்கிய அஸ்வின்.


ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ்பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் 184 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ஜோஸ்பட்லரின் அபார ஆட்டத்தால் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது.
43 பந்துகளில் 69 ரன்களுடன் பட்லர் அபாரமாக ஆடிய நிலையில் 13-ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது 5-ஆவது பந்தில் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்த ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஸ்வின். 
ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. 
இலங்கையில் நடைபெற்ற ஒரு போட்டியிலும் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அதன் வீரர் சேனநாயகே. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பவுலர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் அஸ்வினும் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு தரப்பினர் ஆதரவு, எதிர்ப்பு...


மன்கட் முறை பெயர் காரணம்
கடந்த 1947இல் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி வீரர் பிரவுனை இம்முறையில் ரன் அவுட் செய்தார் இந்தியாவின் வினோத் மன்கட். இதுகுறித்து அப்போதே பெரிய விவாதம் எழுந்தது. எனினும் கிரிக்கெட்டின் விதிமுறைகளில் இந்த அவுட் உள்ளது. 
இதனால் மன்கட் முறை அவுட் என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.
தற்போது ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜஸ்தான் வசம் செல்லவிருந்த வெற்றியை பஞ்சாப் அணி தட்டிச் சென்று விட்டது.

உள்ளுணர்வின்படியே செயல்பட்டேன்: அஸ்வின்
பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்: நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது 
என்றார்.

அஸ்வின் நேர்மையானவரா? : வார்னே
இதுதொடர்பாக ராஜஸ்தான் அணி ஆலோசகர் ஷேன் வார்னே கூறியதாவது-
அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தது கண்டனத்துக்குரியது. அனைத்து கேப்டன்களும் ஆட்டம் நல்லமுறையில் நடைபெற உறுதியேற்பதாக கூறி கையெழுத்திடுகின்றனர். ஆனால் அஸ்வினுக்கு பந்துவீசவே எண்ணமில்லை. டெட் பாலாக கூறியிருக்கலாம். இதுபோன்ற போக்கு ஐபிஎல் போட்டிக்கு நல்லதில்லை. பிசிசிஐ கவனத்தில் கொள்ள வேண்டும்.எந்த வகையிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டின் நேர்மையை பேண வேண்டும். இதுபோல் கோலிக்கு செய்திருந்தால் பேசாமல் இருப்பார்களா? என்றார்.

கிரிக்கெட் உலகம் ஆய்வு செய்யட்டும்: அப்டன்
பட்லர் கிரீஸை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக காத்திருந்து பின்னர் ரன் அவுட் செய்தார் அஸ்வின். இது தவறான போக்காகும். அஸ்வின் இந்த செயல்பாடே அவரை குறித்து எடுத்துரைக்கும். அஸ்வின் செயலை கிரிக்கெட் உலகமே ஆய்வு செய்யட்டும். எங்களை பொறுத்த வரை நேர்மையாக ஆடி, முன்னோடிகளாக செயல்பட்டு, ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்றார்.

ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா
ஆட்டத்தின் மரியாதை கருதி முந்தைய சீசனில் போட்டி தொடங்கும் முன்பு அனைத்து ஐபிஎல் கேப்டன்கள் கோலி, தோனி உள்பட பங்கேற்ற கூட்டத்தில் மன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட் செய்யக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. அது கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டம் என்றார் சுக்லா.

பிசிசிஐ தலையிட மறுப்பு
இந்த விவகாரத்தில் அஸ்வினுக்கு பாடம் எடுக்க பிசிசிஐ விரும்பவில்லை. விதிகளின்படியே அவர் மன்கட் முறையில் அவுட்  செய்தார். மேலும் நடுவர்கள், ஆட்ட நடுவரும், விதிகளின்படி ஆட்டத்தை நடத்த உள்ளனர். ராஜிவ் சுக்லா கூறியது போல் கூட்டம் புதிய விதிகள் அறிமுகம் ஆவதற்கு முன்பு நடத்தப்பட்டது. வார்னே ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் தானே தவிர, மத்தியஸ்தர் இல்லை என பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com