சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி: கனடாவை வீழ்த்தியது இந்தியா
By DIN | Published On : 28th March 2019 01:10 AM | Last Updated : 28th March 2019 01:10 AM | அ+அ அ- |

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.
மலேசியாவில் நடைபெற்றுவரும் சுல்தான் அஸ்லன் ஷா ஆடவர் ஹாக்கி போட்டியில், கனடாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் முதல் பாதியில் அதாவது 20, 27, 29 ஆகிய நிமிடங்களில் 24 வயது மன்தீப் சிங் ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார். முன்னதாக, 12ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் வருண் குமார் முதல் கோல் பதிவு செய்தார்.
இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் முன்னணி வகித்தது. பின்னர், தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.
35ஆவது நிமிடத்தில் கனடா தனது முதல் கோலை பதிவு செய்தது. எனினும், அடுத்தடுத்து இந்திய அணியின் வீரர்கள் அமித் ரோஹிதாஸ் (30ஆவது நிமிடம்), விவேக் பிரசாத் (55ஆவது நிமிடம்), நீலகாந்த சர்மா (58ஆவது நிமிடம்) கோல் பதிவு செய்து வெற்றிக்கு வித்திட்டனர்.
கனடா வீரர்கள் 50ஆவது நிமிடத்திலும், 57ஆவது நிமிடத்திலும் கோல் பதிவு செய்தும் அது அந்த அணிக்கு பலனளிக்காமல் போனது.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. கொரியாவை எதிர்கொண்ட 2ஆவது ஆட்டத்தில் இந்தியா டிரா செய்தது.
3ஆவது லீக் ஆட்டத்தில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி லீக் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் போலந்தை எதிர்கொள்கிறது இந்தியா. 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...