இங்கிலாந்துக்கு பின்னடைவு: இயன் மோர்கனுக்கு ஐசிசி தடை
By Raghavendran | Published On : 15th May 2019 09:20 PM | Last Updated : 15th May 2019 09:20 PM | அ+அ அ- |

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் இயன் மோர்கனுக்கு தடை விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தாமதமாகப் பந்துவீசியது. 50 ஓவர்களை வீச கிட்டத்தட்ட 4 மணி நேரங்களை எடுத்துக்கொண்டது. எனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாக வீசியுள்ளது.
கடந்த 12 மாதங்களில் இதுபோன்று 2-ஆவது முறையாக தாமதமாகப் பந்துவீசியதால் இயன் மோர்கனுக்கு அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாட தடை மற்றும் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுபோன்று அணியின் இதர வீரர்களுக்கு தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
எனவே பாகிஸ்தானுக்கு எதிராக டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறவுள்ள 4-ஆவது போட்டியில் இயன் மோர்கன் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி மாதம் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் இயன் மோர்கன் மீது தாமதமாகப் பந்துவீசிய விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.