கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா?

பயிற்சிக்கும், அணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கும் தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி விதித்த தண்டனை அணியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா?


பயிற்சிக்கும், அணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கும் தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி விதித்த தண்டனை அணியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் மனநிலை பயிற்சியாளராக பேடி உப்டான் இருந்தார். அவர் தனது கிரிக்கெட் அனுபவங்களை 'தி பேர்ஃபூட்' என்ற புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புத்தக வெளியீடு தொடர்பான நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது. அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பேடி உப்டான் பகிர்ந்தார். 

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, 

"நான் இந்திய அணியில் இணைந்த போது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கும்ப்ளே இருந்தார், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி இருந்தார். பயிற்சிக்கும், அணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கும் தாமதமாக வருவது குறித்து வீரர்களிடம் கேள்வி எழுப்பினோம். அனைவரும், ஆம் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்று பதிலளித்தனர். 
இதையடுத்து, தாமதமாக வரும் வீரர்கள் ஏதேனும் தண்டனை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தோம். அந்த தண்டனை குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம், வீரர்களுடனும் உரையாடினோம். இறுதியில் அதை கேப்டன்களின் முடிவுக்கு விட்டுவிட்டோம். 

டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே, தாமதமாக வரும் வீரர் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றார். பிறகு, இதேபோன்ற உரையாடல் தோனியிடம் மேற்கொள்ளப்பட்டது. அவரும் ஆம் தாமதமாக வரும் வீரர்களுக்கு ஏதேனும் தண்டனை விதிக்க வேண்டும் என்றே தெரிவித்தார். அதனால், வீரர்கள் யாரேனும் தாமதமாக வந்தால் அனைவருமே ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தோனி தெரிவித்தார். அதன்பிறகு, ஒருநாள் கிரிக்கெட் அணியில் யாருமே தாமதமாக வந்ததில்லை" என்றார். 

ரூ. 10,000 அபராதம் என்று ஒரே தண்டனை தான். ஆனால், அதையே சற்று மாற்றி யோசித்து அனைவருமே அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்ததன் விளைவாக, தோனி தனக்கு தேவையான இலக்கை அடைந்திருக்கிறார். தோனி இதை அண்மைக் காலத்தில் செய்திருந்தால் அவரது அனுபவம் என்று பாராட்டலாம். ஆனால், அவர் கேப்டனாக பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே இதுபோன்ற முடிவுகளை எடுத்திருக்கிறார் என்பது இந்த இடத்தில் முக்கியமானது.    

பொதுவாகவே, தோனி ஒரு கிரிக்கெட் வீரர் என்பதைக் காட்டிலும் தனது சிறப்பாக முடிவுகள் மூலம் ஒரு தலைவனாகவே பெரும்பாலும் போற்றப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பேடி உப்டான் தெரிவித்துள்ள இந்த தகவல், தோனியின் வெற்றிக்கு பின்னணியில் இருக்கும் மாற்றி யோசிக்கும் திறனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com