மன அழுத்தம் காரணமாக அணியிலிருந்து விலகிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்!
By எழில் | Published On : 09th November 2019 12:48 PM | Last Updated : 09th November 2019 12:50 PM | அ+அ அ- |

கிளென் மேக்ஸ்வெலுக்கு அடுத்ததாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மன அழுத்தம் காரணமாக முக்கியமான ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.
27 வயது நிக் மேட்டின்சன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக பெர்த்தில் நடைபெறவுள்ள அப்போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து பகலிரவு ஆட்டமாக நடைபெறும் அந்தப் பயிற்சி ஆட்டத்தில் கேம்ரூன் பேன்கிராஃப்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
தங்களுடைய மனநிலையை வீரர்கள் வெளிப்படையாகச் சொல்கிறார்கள். எங்களுக்கு வீரர்களின் நலனே முக்கியம். எனவே நிக் மேட்டின்சனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வழங்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி பென் ஓலிவர் கூறியுள்ளார்.
நிக் மேட்டின்சன் இதுபோன்ற ஒரு காரணத்துக்காக அணியிலிருந்து விலகுவது முதல்முறையல்ல. ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று டெஸ்டுகளில் விளையாடிய பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மன அழுத்தம் காரணமாக தற்காலிக ஓய்வு எடுப்பதாகக் கூறினார்.
கடந்த மாத இறுதியில், மன அழுத்தம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகினார். இதையடுத்து தற்போது நிக் மேட்டின்சனும் அதே காரணத்தைக் கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.