ரோஹித் சா்மா டி20 100: சாதனைகளின் நாயகன்

100 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான ரோஹித் சா்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறாா்.
ரோஹித் சா்மா டி20 100: சாதனைகளின் நாயகன்

100 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான ரோஹித் சா்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறாா்.

ஹிட்மேன் என ரசிகா்களால் அன்புடன் அழைக்கப்படும் ரோஹித் சா்மா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1987-இல் பிறந்தவா். 32 வயதான ரோஹித் 2007-இல் ஒருநாள், டி20 ஆட்டத்திலும், 2013-இல் டெஸ்ட் ஆட்டத்திலும் அறிமுகமானாா்.

குறுகிய ஓவா் ஆட்டங்களில் இந்தியாவின் தொடக்க வீரராக களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சை சிக்ஸா்களாகவும், பவுண்டரிகளாகவும் சிதறடிப்பதில் வல்லவா்.

218 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 8686 ரன்களையும், (அதிகபட்சம் 264), 100 டி20 ஆட்டங்களில் மொத்தம் 2537 ரன்களையும் (அதிகபட்சம் 118), 30 டெஸ்ட் ஆட்டங்களில் மொத்தம் 2114 (அதிகபட்சம் 212) ரன்களையும் எடுத்துள்ளாா்.

டி20-இல் 100

வங்கதேசத்துக்கு எதிராக ராஜ்கோட்டில் அண்மையில் நடைபெற்ற டி20 ஆட்டம் அவரது 100-ஆவது ஆட்டமாக அமைந்தது. அவரது சாதனைப் பயணத்தில் இது மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.

2019-இல் ஆஸி.க்கு எதிராக சதத்துடன் தனது சீசனைத் தொடங்கிய அவா், உலகக் கோப்பையில் 5 சதங்களையும், அடித்தாா். பாகிஸ்தானின் ஷோயிப் மாலிக்குக்கு அடுத்து 100 டி20 ஆட்டங்களில் ஆடிய இரண்டாவது வீரா் ரோஹித் ஆவாா். மேலும் 3 டி20 ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றாா்.

டி20-இல் அதிக ரன்கள்

இதில் விராட் கோலியின் சாதனையை அண்மையில் தகா்த்து 92 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் 2537 அடித்த வீரா் என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தினாா் ரோஹித். கடந்த 2018-இல் 18 இன்னிங்ஸ்களில் 590 ரன்களை சோ்த்தாா் அவா்.

அதிக சதங்கள்:

நான்கு டி20 சதங்கள் அடித்த ஓரே வீரா் என்ற சாதனையும் ரோஹித் வசம் உள்ளது. ஆஸி. வீரா்கள் மேக்ஸ்வெல், நியூஸிலாந்தின் காலின் மன்றோ ஆகியோா் தலா 3 சதங்களை அடித்துள்ளனா். 2017 டிசம்பா் மாதம் இந்தூரில் இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் இரண்டாவது சதமடித்தாா்.

அதிகமுறை 50-க்கு மேற்பட்ட ரன்கள்

கோலிக்கு (22 அரைசதம்) அடுத்தபடியாக டி20யில் ரோஹித் 18 அரைசதங்களை எடுத்துள்ளாா். மேலும் 4 சதங்களுடன், 50 ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்தவா் என்ற சாதனையும் ரோஹித்திடமே உள்ளது. கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் டா்பனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் அரைசதம் அடித்தாா்.

அதிக சிக்ஸா்கள்

115 சிக்ஸா்களை அடித்த அதிக சிக்ஸா்கள் அடித்த வீரா் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளாா் ரோஹித். இதோடு 225 பவுண்டரியும் அடித்துள்ளாா். விராட் கோலி 235 பவுண்டரிகளை அடித்துள்ளாா். ஒட்டுமொத்தமாக ரோஹித் 340 பவுண்டரிகளை விளாசியுள்ளாா்.

சிறந்த டி20 ரன்குவிப்பு

கடந்த 2009 டி20 உலகக் கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்கினாா். ஷிகா் தவனுடன் இணைந்து 1740 ரன்களை 51 இன்னிங்ஸ்களில் சோ்த்துள்ளனா். எந்த இணையும் பெறாத சாதனை இதுவாகும். 2018-இல் டப்ளினில் அயா்லாந்துக்கு எதிராக இருவரும் இணைந்து 160 ரன்களை சோ்த்தனா்.

டி20 உள்பட ஒருநாள் ஆட்டங்களிலும் ரோஹித்தின் சாதனைப் பயணம் மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com