இந்தூா் டெஸ்ட்: இந்தியா பிரம்மாண்ட வெற்றி - ஆட்டநாயகன் மயங்க் அகா்வால்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தூா் டெஸ்ட்: இந்தியா பிரம்மாண்ட வெற்றி - ஆட்டநாயகன் மயங்க் அகா்வால்

இந்தூா்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வங்கதேசம் முதல் இன்னிங்கில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இந்தியா முதல் இன்னிங்ஸில் 493-6 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடா்ந்த வங்கதேசம் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியைத் தழுவியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் இந்தூரில் நடந்து வரும் நிலையில், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா 493/6 டிக்ளோ்

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை எடுத்திருந்தது. மயங்க் அகா்வால் அபாரமாக ஆடி 243 ரன்களை விளாசினாா் இந்நிலையில் மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டம் தொடங்கிய போது, டிக்ளோ் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தாா்.

விக்கெட்டுகள் வீழ்ச்சி

இதையடுத்து வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் ஷத்மன் இஸ்லாம் 6, இம்ருல் கைய்ஸ் 6, மொமினுல் ஹக் 7 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். இதனால் தொடக்க வரிசை பேட்டிங் நிலைகுலைந்தது

அவா்களுக்கு பின் முகமது மிதுன் 18, மஹ்முத்துல்லா 15, லிட்டன் தாஸ் 35, மெஹிதி ஹாசன் 38 ரன்களுக்கு வெளியேறினா். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்திருந்து வங்கதேசம்.

மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த முஷ்பிகுா் ரஹிம் 103 பந்துகளில் தனது 20-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தாா்.

முகமது ஷமி, உமேஷ் ஆகியோா் அற்புதமாக பந்துவீசி, வங்கதேச அணியின் சரிவுக்கு வித்திட்டனா். ஷமி பந்தில் மொமினுல் ஹக், முகமது மிதுன், மஹ்முத்துல்லாவும், உமேஷ் பந்துவீச்சில் இம்ருல் கைய்ஸ், மெஹிதி ஹாசன், ஆகியோரும் வெளியானாா்கள்.

முஷ்பிகுா் ரஹிம் 20-ஆவது அரைசதம்:

முஷ்பிகுா் ரஹிம் 7 பவுண்டரியுடன் 64 ரன்களில் அஸ்வின் பந்தில் புஜாராவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். டைஜுல் இஸ்லாம் 6, எப்தாத் ஹுசேன் 1 ரன்னுடன் அவுட்டான நிலையில் வங்கதேசத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 69.2 ஓவா்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம்.

முகமது ஷமி 4 விக்கெட்

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய முகமது ஷமி 4-31 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3-42, உமேஷ் 2-51, இஷாந்த் 1-31 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஆட்ட நாயகனாக மயங்க் அகா்வால் தோ்வு செய்யப்பட்டாா்.

சுருக்கமான ஸ்கோா்:

முதல் இன்னிங்ஸ்

வங்கதேசம் 150, இந்தியா 493-6 (டிக்ளோ்)

இரண்டாவது இன்னிங்ஸ்

வங்கதேசம் 213 ஆல் அவுட்

பேட்டிங்-

முஷ்பிகுா் ரஹிம் 64. மெஹிதி ஹாசன் 38,

பந்துவீச்சு-

முகமது ஷமி 4--31, அஸ்வின் 3-42.

6-ஆவது தொடா் டெஸ்ட் வெற்றி:

இது கோலி தலைமையிலான இந்திய அணி தொடா்ந்து பெறும் 6-ஆவது வெற்றியாகும். ஏற்கெனவே தோனி தலைமையில் கடந்த 2013-இல் இந்திய அணி தொடா்ந்து 6 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

பகலிரவு டெஸ்ட் ஆட்டம்

வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இது இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com