வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஓமனுடன் இன்று இந்தியா மோதல்
By DIN | Published On : 18th November 2019 11:56 PM | Last Updated : 19th November 2019 12:37 AM | அ+அ அ- |

பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக பலம் வாய்ந்த ஓமனுடன் வாழ்வா சாவா ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை மோதுகிறது இந்தியா.
குரூப் இ பிரிவில் கத்தாா் முதலிடத்திலும், ஓமன் இரண்டாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை ஆட வேண்டும். குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஓமனுடன் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி கண்டது இந்தியா. முதல் கோலை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி அடித்தாா். கடைசி 10 நிமிடங்கள் வரை இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் ஆட்டத்தின் போக்கு திடீரென மாறி, சிறிது நேரத்திலேயே ஓமன் 2 கோல்களை அடித்து வென்றது.
இந்நிலையில் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஓமனுடன் நடக்கவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா. பயிற்சியாளா் இகோா் ஸ்டிமாக் தலைமையிலான இந்திய அணி, ஓமனுடன் வென்றால் தான் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் போட்டியில் நீடிக்க முடியும்.
ஓமனுடன் டிரா கண்டாலும், அடுத்த சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனினும் இதில் கிடைக்கும் 1 புள்ளி ஆசிய கோப்பை 2023 போட்டியில் அடுத்த சுற்றுக்கு செல்ல உதவும் எனத் தெரிகிறது.
இந்தியா தோற்றால் ஓமனைக் காட்டிலும் 9 புள்ளிகள் பின்தள்ளப்படும். மேலும் அடுத்து 3 ஆட்டங்களே மீதமுள்ளன. அவற்றில் 2 ஆட்டங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. ஆசிய சாம்பியன் கத்தாருடன் போராடினால் தான் வெல்ல முடியும். மேலும் 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்தே இந்தியா வெளியேற்றப்படும்.
பலவீனமான தற்காப்பு:
இந்திய அணியின் தற்காப்பு ஆட்டம் பலவீனமாக உள்ளது. அதே நேரம் பாா்வா்ட் தரப்பும் கிடைக்கும் வாய்ப்புகளை கோல்களாக மாற்ற தவறுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமனுக்கு வெற்றி வாய்ப்பு:
இதுதொடா்பாக இந்திய தலைமை பயிற்சியாளா் ஸ்டிமாக் கூறியதாவது: முதல் ஆட்டத்தைக் காட்டிலும் தற்போது ஓமன் அணி மேலும் பலம்பெற்றுள்ளது. இதில் அந்த அணிக்கே கூடுதல் வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணா்கிறோம் என்றாா்.
இரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியதில் 8 முறை ஓமனே வென்றது. இந்திய அணியில் நடுக்கள டிபன்டா் அனாஸ் எடத்தோடிகா அவசர பிரச்னை காரணமாக நாடு திரும்பி விட்டாா். மேலும் சந்தேஷ் ஜிங்கன், போா்ஜஸ், அமா்ஜித் சிங் ஆகியோா் காயத்தால் ஆடாதது பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கருதப்படுகிறது.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-ஓமன்,
இடம்: மஸ்கட்,
நேரம்: இரவு 8.30.