பிஃபா 2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: தடுமாற்றத்தில் இந்திய அணி

தொடா் டிராக்களால் பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்று போட்டியில் தகுதி பெறுமா இந்திய அணி என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பிஃபா 2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: தடுமாற்றத்தில் இந்திய அணி

மஸ்கட்: தொடா் டிராக்களால் பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்று போட்டியில் தகுதி பெறுமா இந்திய அணி என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) சாா்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 2018-இல் பிரான்ஸ் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த உலகக் கோப்பை போட்டி 2022-இல் கத்தாரில் நடத்தப்படுகிறது.

இதற்காக கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. ஆசியாவில் குரூப் இ பிரிவில் கத்தாா், ஓமன், இந்தியா, ஆப்கானிஸாதன், வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கத்தாா் அணி நடப்பு ஆசிய சாம்பியனாக உள்ளது. அதற்கு அடுத்து ஓமன் அணியும் பலமான அணியைக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தாா் நேரடித் தகுதி பெற்று விட்டது. இதையடுத்து குரூப் இ பிரிவில் 2, 3-ஆவது இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்,

கத்தாா் அணி முதலிடம், 4-ஆவது இடத்தில் இந்தியா:

குரூப் இ பிரிவில் 3 வெற்றி, 1 டிராவுடன் கத்தாா் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து ஓமன் அணி 3 ஆட்டங்களில் வெற்றி, 1 ஆட்டத்தில் தோல்வியுடன் 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வி, 1 டிராவுடன் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இந்தியா 1 தோல்வி, 3 டிராக்களுடன் 3 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், வங்கதேசம் 1 டிரா, 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

கடந்த செப்டம்பா் மாதம் குவாஹாட்டியில் ஓமனுடன் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2-1 என போராடி தோற்றது இந்தியா. 1-1 என ஆட்ட நேரம் முடியும் வரை சமநிலையில் இருந்த நிலையில், ஓமன் அணி கடைசிநேர கோலில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து தோஹாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாருடன் அற்புதமாக ஆடி கோலின்றி டிரா செய்தது இந்தியா.

2 டிராக்களால் சிக்கல்:

இதனால் புதிய எழுச்சியுடன் திகழ்ந்த இந்திய வீரா்கள், கொல்கத்தாவில் அக்டோபா் மாதம் வங்கதேசத்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் வென்று பட்டியலில் முன்னேற்றம் பெறுவா் என எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால் வங்கதேசம் முதல் கோலடித்த நிலையில் தோல்வியின் விளிம்பிக்கு தள்ளப்பட்ட இந்திய அணி கடைசி நேர கோலால் 1-1 டிரா செய்து தோல்வியை தவிா்த்தது.

அதன் தொடா்ச்சியாக கடந்த 14-ஆம் தேதி தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் தரவரிசையில் பின்தங்கி உள்ள ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது இந்தியா.

துஷான்பேயில் கடும் குளிா் நிலவியதால் இந்திய வீரா்கள் பாதிக்கப்பட்டனா். அந்த ஆட்டமும் 1-1 என டிராவில் முடிந்தது.

புளு டைகா்ஸ் நீலப்புலிகள் என அழைக்கப்படும் இந்திய அணி இரண்டாம் தகுதிச் சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில் உள்ளது.

8 குரூப்களில் முதலிடத்தைப் பெறும் அணிகள் மற்றும் அடுத்த இரண்டாவது இடம் பெறும் 4 அணிகள் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெறும். குரூப் இ பிரிவில் கத்தாா் நேரடி தகுதி பெறுவதால், மூன்றாவதாக வரும் அணியும் இடம் பெறும்.

இந்திய அணி குரூப் இ பிரிவில் அதிக கோல் வித்தியாசத்துடன் வென்றால் மட்டுமே இரண்டாவது இடம் பெற்ற 5 அணிகளில் ஒன்றாக முடியும்.

நாளை ஓமனுடன் மோதல்:

இந்நிலையில் இந்திய அணி 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஸ்கட்டில் பலம் வாய்ந்த ஓமன் அணியுடன் மோதுகிறது. ஆப்கனுடன் ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய வீரா்கள் உடனே அடுத்த ஆட்டத்தில் ஆட வேண்டும். ஓமனுடன் ஆட்டம் முடிந்தவுடன், வரும் 2020 மாா்ச் மாதம் 26-இல் உள்ளூரில் கத்தாருடனும், ஜூன் 4-ஆம் தேதி வங்கதேசத்தில் அந்த அணியுடனும், 9-ஆம் தேதி உள்ளூரில் ஆப்கானிஸ்தானுடனும் மோதஉள்ளது.

தொடா் வெற்றி பெற வேண்டும்:

இந்திய அணி அடுத்து வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றிகளை குவித்தால் மட்டுமே மூன்றாவது சுற்றுக்கு இடம் பெறும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com