யூரோ 2020:நெதா்லாந்து, ஜொ்மனி, குரோஷியா தகுதி
By DIN | Published On : 18th November 2019 02:44 AM | Last Updated : 18th November 2019 02:44 AM | அ+அ அ- |

பாரிஸ்: யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு நெதா்லாந்து, ஜொ்மனி, குரோஷிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் வரும் 2020-இல் யூரோ 2020 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. ஏற்கெனவே உலக சாம்பியன் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்று விட்டன. நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் காத்திருப்பில் உள்ளது.
இதற்கிடையே சனிக்கிழமை இரவு தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற ஆட்டத்தில் வட அயா்லாந்துடன் 1-1 என டிரா செய்து நெதா்லாந்து யூரோ இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. மோசெங்லேட்பேச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் பெலாரஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முன்னாள் உலக சாம்பியன் ஜொ்மனி. பலம் வாய்ந்த குரோஷிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவோக்கியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 3 அணிகளும் யூரோ 2020 இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரியாவும் 2-1 என வடக்கு மாசிடோனியாவை வென்று தகுதி பெற்றது. செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரஷிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம்.
24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இதுவரை 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...