டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் புதிய வண்ணம் அடிக்கும் பகலிரவு டெஸ்டுகள்: முடிவுகளும் புள்ளிவிவரங்களும்

டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் புதிய வண்ணம் அடிக்கும் பகலிரவு டெஸ்டுகள்: முடிவுகளும் புள்ளிவிவரங்களும்

இதுவரை நடைபெற்ற அனைத்து 11 டெஸ்டுகளிலும் முடிவுகள் கிடைத்துள்ளன.

இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

இதுவரை 11 பகலிரவு டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மே.இ. தீவுகள் ஆகிய நாடுகளில் தலா 1 டெஸ்ட் என பெரும்பாலான நாடுகள் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களை நடத்தியுள்ளன. 

முதல் பகலிரவு டெஸ்ட், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 2015-ல், ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த டெஸ்டை, மூன்றாம் நாளன்று மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 

ஆஷஸ் தொடருக்குப் பிறகு இந்த டெஸ்டுக்குத்தான் ஆஸ்திரேலியாவில் அதிக ரசிகர்கள் திரண்டார்கள். மேலும் அடிலெய்டில் தொடர்ந்து பகலிரவு டெஸ்ட் நடைபெறவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். இதன்பிறகு பகலிரவு டெஸ்ட் என்றாலே அடிலெய்ட் என்றாகிவிட்டது. 2018-ல் மட்டும் இந்திய அணி மறுப்பு தெரிவித்ததால் வழக்கமான முறையில் அடிலெய்டில் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. பிரிஸ்பேனில் இரு பகலிரவு டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன. 

2016, 2017-ல் துபையில் இரு பகலிரவு டெஸ்டுகள் நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற அனைத்து 11 டெஸ்டுகளிலும் முடிவுகள் கிடைத்துள்ளன.

* பகலிரவு டெஸ்டுகள் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் பேட்ஸ்மேன்களும் சாதிக்காமல் இருந்ததில்லை. துபையில் 2016-ல் பாகிஸ்தானின் அஸார் அலி முச்சதம் அடித்தார். கடந்த வருடம் இங்கிலாந்து அலாஸ்டர் குக் 243 ரன்கள் எடுத்தார். வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சாளர்களும் பகலிரவு டெஸ்டில் சாதிக்க முடியும் என நிரூபித்தவர், தேவேந்திர பிஷு. பாகிஸ்தானுக்கு எதிராக 8/49 எடுத்து அசத்தினார்.  

* ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய 5 பகலிரவு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் வென்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இதுவரை மூன்று டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. 

* பகலிரவு டெஸ்டுகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடம் பாகிஸ்தானின் அஸார் அலிக்குத்தான். 6 இன்னிங்ஸில் 456 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித், 4 டெஸ்டுகளில் 405 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் அசாத் ஷஃபிக் மட்டுமே இரு சதங்கள் அடித்துள்ளார். 

* அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் ஸ்டார்க்குக்கு முதலிடம். 5 டெஸ்டுகளில் 26 விக்கெட்டுகள். 

பகலிரவு டெஸ்டுகளும் முடிவுகளும்

முதல் பகலிரவு டெஸ்ட், 2015 நவம்பர்: நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா
2-வது பகலிரவு டெஸ்ட், 2016 அக்டோபர்: மே.இ. தீவுகளை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்     
3-வது பகலிரவு டெஸ்ட், 2016 நவம்பர்: தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா
4-வது பகலிரவு டெஸ்ட், 2016 டிசம்பர்: பாகிஸ்தானை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா
5-வது பகலிரவு டெஸ்ட், 2017 ஆகஸ்ட்: மே.இ. தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
6-வது பகலிரவு டெஸ்ட், 2017 அக்டோபர்: பாகிஸ்தானை 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை
7-வது பகலிரவு டெஸ்ட், 2017 டிசம்பர்: இங்கிலாந்தை 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா
8-வது பகலிரவு டெஸ்ட், 2017 டிசம்பர்: ஜிம்பாப்வே அணியை இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா
9-வது பகலிரவு டெஸ்ட், 2018 மார்ச்: இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து
10-வது பகலிரவு டெஸ்ட், 2018 ஜூன்:   மே.இ. தீவுகளை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை
11-வது பகலிரவு டெஸ்ட், 2019 ஜனவரி: இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com